

ஈரான் நாட்டு கடற்படையால் பிடித்து செல்லப்பட்டு நாடு திரும் பிய 4 குமரி மாவட்ட மீனவர் களுக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டினம் மீனவ கிராமத் தைச் சேர்ந்த 4 தமிழக மீனவர்கள், துபாயைச் சேர்ந்த தனியார் மீன் பிடி படகில் ஒப்பந்தத் தொழிலா ளர்களாக, அஜ்மான் கடல் பகுதியில் பணியாற்றி வந்தனர். கடந்த பிப்ரவரி 6-ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது ஈரான் நாட்டு கடல் பகுதிக்குள் வழிதவறி சென்றுவிட்டனர்.
அந்நாட்டு கடற்படையினரால் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், மீனவர் ஒருவர் காயமடைந்து, ஈரான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையறிந்த முதல்வர் ஜெயலலிதா, 4 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்தார். தமிழக அரசு அதிகாரிகள், ஈரான் நாட்டு இந்திய தூதரக அதிகாரிகள், மத்திய அரசு வெளி விவகாரத் துறையினரையும் தொடர்பு கொண்டனர். 4 மீனவர்களின் விடுதலைக்கான சட்ட உதவிகளை அளித்ததுடன், உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
தமிழக அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக, 4 தமிழக மீனவர்களும் ஈரான் அரசால் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி விடுதலை செய்யப்பட்டு மே 1-ம் தேதி சென்னை வந்தடைந்தனர். அவர்களின் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகையாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.