

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் காரணங்களுக்கு மத்தியில் உள்ள பாஜக அரசுதான் காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை சின்னியம்பாளையத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டார மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசியலில் தற்போது நடக்கும் சம்பவங்கள் அனைத்தும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்காக மத்திய பாஜக அரசினால் நடத்தப்படுபவை. தமிழகத்தில் எப்படியாவது நுழைய வேண்டுமென பாஜக முயற்சிக்கிறது. அதிகாரத்தையும், நிதிபலத்தையும் பயன்படுத்தி அதிமுகவை உடைக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரவும் பாஜக முயற்சிக்கிறது.
தற்போதைய முதல்வர் பொறுப்பு மலர்கீரிடம் அல்ல; முள்கீரிடம் போன்றது. இனி தமிழக சட்டப்பேரவைக்கு நித்யகண்டம் பூர்ண ஆயுசுதான். ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்துதான் ஆள் பவர்கள் பொறுப்பில் நீடிக்க முடியும்.
சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டப்பேரவைத் தலைவர் மரபுப்படியே நடந்து கொண்டார். எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என சொல்ல முடியாது. திமுக உள்ளிட்ட கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென பேரவைத் தலைவருக்கு உத்தரவிடுவது ஜனநாயகத்தை மீறிய செயலாகும்.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி மக்கள் நலனைத் தவிர தனக்கு எதுவும் தேவையில்லை என நற்பெயர் எடுக்க வேண்டும் என்றார்.