

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை சம்பவத்துக்கு பின் தற்போது இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.
நகரில் 90% கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. நகர் முழுவதும் அமைதியை நிலைநாட்ட 3000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏடிஜிபி திரிபாதி தொடர்ந்து 4-வது நாளாக கோவையில் முகாமிட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போக்கை அவர் நேரடியாக கண்காணித்து வருகிறார்.
தேர்தல் அறிவிப்பின் எதிரொலி:
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இதனால் கோவையில் சசிக்குமார் கொலை சம்பவ பரபரப்பு சற்று நீர்த்துப்போயுள்ளது. அரசு அதிகாரிகள் பலர் உள்ளாட்சி தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பாகியுள்ளனர். மக்கள் கவனமும் உள்ளாட்சித் தேர்தல் பக்கம் திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'சந்தேக நபர்களை நெருங்கிவிட்டோம்'
இதற்கிடையில் இந்த வழக்கில் சந்தேக நபர்களை நெருக்கிவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 'தி இந்து' நாளிதழுக்கு பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "சசிக்குமார் கொலை வழக்கில் சந்தேக நபர்களை நெருங்கிவிட்டோம். மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் சந்தேக நபர்கள் பிடிபடுவார்கள்" என்றார்.
ஆனால் கொலைக்கான காரணம் என்னவாகும் இருக்கும் என்பது குறித்து போலீஸ் தரப்பிலிருந்து சிறு தகவல்கூட வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படுகிறது.
6 தனிப்படைகள்:
இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 22-ம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து நகரில் வன்முறை வெடித்தது. கடந்த 23-ம் தேதி நடைபெற்ற வன்முறையில் கடைகள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தின் துடியலூர் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளில் இதுவரை 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க டிஐஜி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு தனிப்படைகளுக்கு ஒரு எஸ்.பி. தலைமை ஏற்றுள்ளார். மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் சாதுர்யம்:
இந்து முன்னணி பிரமுகர் கொலையைக் கண்டித்து வன்முறையில் ஈடுபட்டதாக கைதான 255 பேரும் கோவையில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம், திருச்சி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனவரையும் போலீஸார் சாதுர்யமாக வெளியூர் சிறைகளில் அடைத்துள்ளனர். உள்ளூர் சிறையில் அடைத்தால் அவர்களைப் பார்க்க உறவினர்கள் அல்லது அமைப்பினர் யாராவது வரலாம். அதனால் அநாவசியமாக கூட்டம் கூடும் என்பதாலேயே போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஆறுதல் தரும் அமைதி..
கோவையில் இதற்கு முன்னர் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவரோ அல்லது மாற்று மத அமைப்பைச் சேர்ந்தவரோ கொல்லப்பட்டால் பதிலுக்கு எதிர்தரப்பில் ஒரு கொலை சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஆனால் இந்த முறை போலீஸாரின் கெடுபிடியால் வன்முறை வேகமாக ஒடுக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஆறுதல் தரும் அமைதியாகவே கோவை நகரவாசிகளால் பார்க்கப்படுகிறது.
28-ல் அஸ்தி கரைப்பு:
28-ம் தேதி வரும் புதன்கிழமையன்று சசிக்குமார் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதி வாயிலாக பவானி ஆற்றுக்கு அஸ்தி கொண்டு செல்லப்படுகிறது.
அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் சசிக்குமார் ஆதரவாளர்கள், குடும்பத்தார் கலந்து கொள்கின்றனர். இந்த அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் காவல்துறை மிக கவனமாக செயல்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.
அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்கான பேரணி செல்லும் வழியில் முஸ்லிம் குடியிருப்புகள் இருப்பதால் காவல்துறை கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.