இயங்காத லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள் - பறக்கும் ரயில் நிலையங்களின் பரிதாப நிலை

இயங்காத லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள் - பறக்கும் ரயில் நிலையங்களின் பரிதாப நிலை
Updated on
1 min read

ரயில்வே டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுக்கையில், "ரயில் நிலைய வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்" என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பை ஒட்டி வைத்திருந்தார்கள். இதைப்பார்த்து ரயில் நிலையம் ரொம்ப சுத்தமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். ரயில் நிலையத்துக்குள் நுழையும் இடத்திலேயே மழைநீர் தேங்கி ஒரு கொசுப் பண்ணையே உருவாகியுள்ளது.

இதையெல்லாம் கடந்து நீங்கள் ரயிலைப் பிடிக்க மாடிக்கு செல்ல நினைத்தால் லிப்டுகளோ, எஸ்கலேட்டர்களோ இயங்காத நிலையில் உள்ளன. மூச்சிறைக்க மாடிப்படிகளில் ஏறிப்போய்த்தான் ரயிலைப் பிடிக்க முடியும். மேலே போனாலோ எப்போதடா ரயில் வரும் என்ற மனநிலைக்கு நீங்கள் வந்து விடுவீர்கள். அந்த அளவு சுற்றிலும் குப்பை மயம். எச்சில் அபிஷேகங்கள்.

சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையத்தில்தான் இத்தனை கொடுமைகளும்..

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் (எம்.ஆர்.டி.எஸ்.) இயக்கப்படுகின்றன. இவற்றிற்கு இடையே தலைமை செயலகம், பூங்காநகர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.

இதில் கடற்கரை, மயிலாப்பூர், திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய ரயில் நிலையங்களைத் தவிர மற்ற ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அறவே இல்லை. எஸ்கலேட்டர்கள் தொடர்ச்சியாக இயங்குவதில்லை என்று பயணிகள் புகார் கூறுகின்றனர்.

அவ்வப்போது எஸ்கலேட் டர்கள் வேலை செய்யாததால், ஊனமுற்றோர், முதியோர் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த மார்க்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பயணித்து வரும் தனியார் மருத்துவமனை நர்ஸ் பத்மாவதி கூறுகையில், “ பறக்கும் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. தனியாக வரும் பெண்களுக்கு கொஞ்சம்கூட பாதுகாப்பு இல்லை” என்கிறார்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “நம்ம ரயில் நிலையங்களை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இல்லை. பறக்கும் ரயில் நிலையங்கள் எல்லாவற்றிலும் பாதுகாப்பு அளிக்க, ரயில்வே பாதுகாப்பு படையில் போதிய போலீஸ்காரர்கள் இல்லை. மக்களின் சிரமத்துக்கு இதுவும் காரணம். ரயில் போக்குவரத்து இல்லாத நேரத்தில் ரயில் நிலையங்களை மூடி வைக்கவும், பயணிகள் பாதுகாப்புக்கு கூடுதல் போலீசாரை நியமிக்கவும் ரயில்வே நிர்வாகத்தைக் கேட்டிருக்கிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in