

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி இல்லை என்று திமுக பொதுக்குழுவில் அந்த கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார். இது தொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “இந்த முடிவு திமுக கட்சியை சார்ந்தது. அதில் கருத்து கூற என்ன இருக்கிறது” என்றார்.
பாமக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சாதி கட்சிகள் மற்றும் சாதி அமைப்புகளை ஒன்றாக இணைத்து சமூக ஜனநாயக கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலையும் ராமதாஸ் வெளியிட்டார்.
கூட்டணி இல்லாமல் தனித்து நின்றால், வெற்றி பெறுவது கடினம் என்பதை கட்சியின் தலைமை தற்போது உணர்ந்துள்ளது. அதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தற்போது பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் பாமக கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.