

அதிமுக தலைமை அலுவலகத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கைப்பற்ற முயற்சிக்கலாம் என்று கருதி அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சசிகலா ஆதரவாளர்கள் குவிக் கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், மக்கள் விருப்பப்படி நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவித்த முதல்வர் ஓபிஎஸ், அதற்காக கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்துள்ளார். அடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றக்கூடும் என தகவல் பரவியது.
‘‘அதிமுக மீது கைவைக்க நினைத்தால், ஓபிஎஸ் உடம்பில் கை இருக்காது’’ என அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் கலைராஜன் எச்சரித்தார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்வினையை ஏற்படுத்தி யுள்ளது.
போலீஸ் தடுப்புகள்
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவினரின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அவரது வீட்டுக்கு வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவ்வை சண்முகம் சாலை, கவுடியா மடம் சாலை சந்திப்பு பகுதியில் போலீஸார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பந்தல் வசதி
மேலும், அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் சசிகலா தரப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரவு, பகலாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்காக வெளியில் சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது.