

சென்னையைச் சேர்ந்த மாற்றம் இந்தியா அமைப்பின் தலைவரான ஏ.நாராயணன் உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த ஒரு பொது நல மனுவில், ‘விதிமுறைகளை மீறி கோயில், கல்வி நிலையங் கள், மருத்துவ மனைகள், குடியி ருப்பு பகுதிகள், பேருந்து நிலையங் களின் அருகில் அதிகப்படியான மதுபானக் கடைகள் உள்ளன.
எனவே விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் மற்றும் ஆடம்பர மதுபான விடுதிகளை உடனடியாக அங் கிருந்து அகற்ற வேண்டும்.’ என அதில் கோரியிருந்தார்.
இம்மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள் அருகில் உள்ள மதுபானக் கடைகள் குறித்து கணக்கெடுக்க டாஸ்மாக்குக்கு 6 மாத அவகாசம் வழங்கியிருந்தது.
இந்தக் காலக்கெடு முடிந்த நிலை யில் இம்மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக் குமாரசுவாமி தாக்கல் செய்த பதில்மனுவில், ‘‘தமிழகம் முழுவதும் 6,776 மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் கோயில்கள் மற்றும் வழி பாட்டுத் தலங்கள், பள்ளி, கல்வி நிறுவனங்கள் அருகில் மட்டும் 900 மதுபானக்கடைகள் உள்ளதாக இதுவரை கணக்கெடுக்கப் பட்டுள்ளது.
நவம்பர் 25-க்கு தள்ளிவைப்பு
துல்லியமாக தூரத்தை அளவிடுவதில் நடைமுறை சிக்கல் இருப்பதால் இப்பணியை முடிக்க இன்னும் 2 மாதம் அவகாசம் தேவை’’ என்றார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த 900 மதுபானக்கடைகளையும் 6 மாதத்தில் அங்கிருந்து அப்புறப் படுத்துவதற்கு கோரப்படும் காலஅவகாசத்தில் இந்த 2 மாதங்கள் கழித்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டனர். விசாரணையை நவம்பர் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.