

கலப்பட பால் தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன் என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
ஆவின் நிறுவனம் சார்பில் ஒரு கிலோ தயிர் பக்கெட் (வாளி), ரசகுல்லா ஆகிய பொருட்கள் நேற்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஒரு கிலோ தயிர் பக்கெட் ரூ.100-க்கும் ரசகுல்லா 100 கிராம் ரூ.40-க்கும், 200 கிராம் ரூ.80-க்கும் விற்கப்படும்.
இந்த புதிய பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்றுபுதிய பொருட்களை அறிமுகம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆவின் பால் மற்று பால் பொருட்களில் எந்த விதமான ரசாயனப் பொருட்களும் கலக்கப்படுவது இல்லை. ஆவின் பால் தாய் பாலுக்கு நிகரானது. மக்கள் நம்பிக்கையுடன் வாங்கிப் பருகலாம். ஆவின் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக பக்கெட் தயிர் மற்றும் ரசகுல்லாவை இன்று அறிமுகப்படுத்தி உள்ளோம்.
‘இல்லம் தேடி வரும் ஆவின்’ என்ற திட்டத்தை ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளோம். அந்த திட்டத்தை சென்னையில் அண்ணாநகர், முகப்பேர், அரும்பாக்கம், மாதவரம், அசோக்நகர், பெசன்ட் நகர், அடையார், அண்ணாநகர் மேற்கு, விருகம்
பாக்கம் ஆகிய 9 இடங்களுக்கு தற்போது விரிவுபடுத்தியுள்ளோம். இப்பகுதிகளில் உள்ளவர்கள் தொலைபேசியில் ஆர்டர் செய்தால் அவர்களின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று டெலிவரி செய்யப்படும்.
அனைத்து தனியார் நிறுவனங்களும் பாலில் கலப்படம் செய்வதாக நான் கூறவில்லை. சில தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்து விற்கின்றன. அந்த நிறுவனங்களின் பால் மாதிரிகளை சோதனை செய்து வருகிறோம். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள்.
கலப்பட பால் விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் எடுத்து கூறியுள்ளேன். கலப்பட பால் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.