

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பெண்கள் உட்பட 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் துரதிஷ்டவசமானது, மிகவும் வருத்ததுக்குரியது.
காவல் துறையினர் விபத்து நடந்த பட்டாசு ஆலையை ஆய்வு செய்து விபத்திற்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும். அதனடிப்படையில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் காலம் கோடை காலம் என்பதால் பட்டாசு தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணிப்பதோடு, இதுபோன்ற விபத்துகள் இனியும் நடைபெறாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஏழை, எளிய கூலித்தொழிலாளர்கள் இது போன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தடுத்து நிறுத்த பட்டாசு ஆலை அதிபர்கள் பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். பணிபுரியும் தொழிலாளர்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். அரசு அதிகாரிகள் பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக, முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பதை தொடர்ந்து கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் அனைவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிப்பதோடு அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் விபத்தில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.