

ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை கோரி, வரும் 30ம் தேதி, போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகங்கள் முன், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பொதுச் செயலாளர் மு.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 2013 முதல் ஏற்பட வேண்டிய புதிய ஊதிய உயர்வுக்கான கோரிக்கையின் மீது பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை. தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என, தொ.மு.ச. பேரவை நடத்திய வாக்கெடுப்பில் 94,000 தொழிலாளர்கள் வாக்களித்தனர். அதில், 83,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வாக்கெடுப்பின் மூலம், அ.தி.மு.க. அரசுக்கெதிரான தங்கள் எதிர்ப்பைத் தொழிலாளர்கள் தெரிவித்தபோதும், தமிழகத்தில் பண்டிகைகள் வரவுள்ளதையும், அதில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வேலை நிறுத்தம் செய்வதும், நிதி இடர்பாட்டில் தத்தளிக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் சிக்கலை உருவாக்குமே என தொ.மு.ச. பேரவை சிந்திக்கிறது.
எனவே, தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களை எதிர்த்து போக்குவரத்துக் கழக
இணைப்புச் சங்கங்கள் சார்பில் டிசம்பர் 30-ம் தேதி கோட்ட மற்றும் மண்டல தலைமையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.