Published : 07 Jul 2015 07:52 AM
Last Updated : 07 Jul 2015 07:52 AM

4 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்த கொடூரம்: 2 இளைஞர்கள் கைது; மேலும் 4 பேருக்கு வலைவீச்சு

இளைஞர்கள் சிலர், நான்கு வயது சிறுவனுக்கு டம்ளரில் மதுவை ஊற்றி கொடுக்கும் காட்சி “வாட்ஸ்அப்”, “பேஸ் புக்”கில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

1 நிமிடம் 37 விநாடிகள் ஓடிய காட்சியில், சிறுவனை வலுக்கட்டாயமாக மது குடிக்க வலியுறுத்துவதும், குடித்து முடித்ததும் டம்ளரை வேகமாக சிறுவன் வீசி எறிவதும் இடம்பெற்றுள்ளது.

சிறுவன் மற்றும் இளைஞர்கள் மது குடிக்கும் இடம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு வாகனத்தில் “TN25 AJ 8209” என்ற பதிவு எண் இருந்தது. அந்த வாகனம், திருவண்ணாமலை மாவட்ட பதிவு எண் கொண்டது. இதனால், தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் இந்த வாட்ஸ்அப் காட்சிகள் நேற்று கிடைத்துள்ளது.

அந்த காட்சியை பார்த்த, திருவண்ணாமலை ஆட்சியர் அ.ஞானசேகரன் அதிர்ச்சி அடைந் துள்ளார். உடனடியாக, வாகன பதிவு எண் குறித்து விசாரணை நடத்தி, அந்த வாகனம், போளூர் வட்டம் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் செந்தில் என்பவருக்குச் சொந்தமானது என்பதை ஆட்சியர் உறுதி செய்தார். இதையடுத்து சிறுவன் மது குடிக்கும் காட்சி மற்றும் சேகரிக்கப்பட்ட தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னியிடம் தெரிவித்து உடனடி யாக நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், போளூர் டிஎஸ்பி கணேசன், கடலாடி காவல்நிலைய ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை முயற்சி வழக்கு மற்றும் குழந்தை கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செந்தில்(24), பிரேம்குமார்(22) ஆகிய 2 பேர் கைது செய்யப் பட்டனர்.

தனிப்படை போலீஸார் கூறும் போது, “4 வயது சிறுவனை மது குடிக்க வைத்ததாக மேல்சோழங் குப்பம் கிராமத்தில் வசிக்கும் செந்தில், பிரேம்குமாரை கைது செய்து விசாரித்ததில் முழு விவரம் தெரியவந்தது.

மது குடித்த சிறுவனின் தந்தை ஆனந்தன் மற்றும் தாய் ஈஸ்வரி ஆகியோர் கட்டுமானத் தொழிலாளி கள். சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஈஸ்வரியின் தந்தை சின்னபையன், தாயார் முனியம்மாள் ஆகியோரது பராமரிப்பில் சிறுவன் வளர்ந்து வருகிறான். அங்கன்வாடிக்கு சென்று படிக்கிறான்.

23-06-15 அன்று ஆடு மேய்க்கச் சென்ற பாட்டி முனியம்மாள், தனது பேரனையும் அழைத்துச் சென்றுள்ளார். மேல்சோழங்குப்பம் ஏரி அருகே உள்ள காலி இடத்தில், அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவனை அவனது தாய்மாமன் முருகன் அழைத்துச் சென்றுள்ளார். மரத்தடியில் சிறுவனை உட்கார வைத்து, வாங்கி வைத்திருந்த பீர் நிரப்பப்பட்ட டம்ளரை கொடுத்து இளைஞர்கள் சிலர் குடிக்க செய்துள்ளனர். இந்த செயலில் ஏழுமலை மற்றும் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காட்சியை தனது செல்போன் மூலமாக பிரேம்குமார் படம் பிடித்துள்ளார். பின்னர் அவர், அதனை மணிகண்டன் என்ப வருக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் மூலமாக சிறுவன் பீர் குடிக்கும் காட்சி வேகமாக பரவி உள்ளது. இந்த சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறோம். ஏழுமலையின் இருசக்கர வாகனம், பிரேம்குமாரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

வழக்கறிஞர் பாசறை பாபு கூறும்போது, “பள்ளி மாணவர்கள் மது குடிப்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் 4 வயது சிறுவனுக்கு குடி பழக்கத்தை ஏற்படுத்தும் செயல் மன்னிக்க முடியாதது. மது பழக்கத்தை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. ஏற்கெனவே 2 தலைமுறைகளை ஆட்சியாளர்கள் அழித்துவிட்டனர். இப்போது உருவாகும் புதிய தலைமுறையும் அழிவின் பாதைக்கு சென்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது. பள்ளிக்கூடங்களில் நீதிக் கதைகள் கற்றுத் தருவது இல்லாமல் போய் விட்டது. அதை கற்றுக்கொடுத்து நல் ஒழுக்கம் உள்ள சமுதாயத்தை பாட சாலைகள் உருவாக்க வேண்டும்” என்றார்.

கண்டனம்

இந்த சம்பவத்துக்கு கண்ட னம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆகியோர் குற்றவாளிகள் மீது கடும் நட வடிக்கை வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x