

மத்திய ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது, சாதித்தது என்ன என்பது பற்றி திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்ப தாவது:
மத்திய அமைச்சரவையில் திமுக பங்கேற்ற காலங்களில், தமிழக வளர்ச்சிக்குத் தேவையான பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். குறிப்பாக சேது சமுத்திரத் திட்டம், தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி, சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், கடல்சார் தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசில் அங்கம் வகித்த நேரத்தில், திமுக-வின் பலம் என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்ப, தமிழகத்தின் தேவைகளைப் பெற்று வந்தது. அதனால்தான் அகில இந்திய அளவில் ‘திமுக ஒரு நல்ல தோழமைக் கட்சி’ என்ற பெயரினைப் பெற முடிந்தது.
கடந்த 1998-ம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு தருவதாகக் கூறிய ஜெயலலிதா, ஆதரவுக் கடிதம் கொடுப்பதற்கு முன்பாக, திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும், தன் மீதுள்ள வழக்குகளையெல்லாம் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரினார். பின்னர் மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்குபெறும் என்று கூறிய ஜெயலலிதா, தனக்காகவும், குறிப்பிட்ட சிலருக்கு பதவியைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் மத்திய அரசை எப்படியெல்லாம் ஆட்டுவித்தார் என்பவை குறித்து அன்றைய நாளேடுகளில் பல செய்திகள் வெளிவந்துள்ளன.
கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய அன்று, பிரதமராக இருந்த வாஜ்பாய் மனம் வெதும்பி, ‘நிம்மதியோடு இன்றிரவு தூங்குவேன்’ என்று கூறும் அளவுக்குக் கூட்டணிக் கட்சிக்கு நெருக்கடிகளைக் கொடுத்தவர் ஜெயலலிதா.
இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சரவையில் கடந்த 17 ஆண்டுகளாகப் பங்கு பெற்ற திமுக, தமிழகத்துக்கு என்ன செய்தது என்று பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வருகிறார்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.