

கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை யில் ‘தி இந்து’ நாளிதழ் சார்பில் நேற்று நடைபெற்ற ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’ நிகழ்ச்சி, உடற்பயிற்சி, யோகா, நடனம், வில்லுப்பாட்டு, மேஜிக் ஷோ, சைக்கிள் பேரணி என களைகட்டியது. இந்த நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையில் சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடி மகிழ்ந்தனர்.
கோவை மாநகராட்சி, மாநகரப் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஏற்கெனவே என்.எஸ்.ஆர். சாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’ நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது புதிய உத்வேகத்துடன் ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பீத்தோவன்ஸ் பாடிசீல் உடற்பயிற்சி நிறுவனம் சார்பில், ஏரோபிக்ஸ், ஜும்பா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் மற்றும் யோகா நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
மேட்டுப்பாளையம் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ, மாணவிகளின் வில்லுப்பாட்டு, மேஜிக் ஷோ, யோகா, நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக, வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில், சுற்றுப்புறத் தூய்மை, புகையிலையின் தீமைகள், ஹெல்மெட் அணிவதன் அவசியம், செல்போன் பேசியபடியும், மது அருந்திய நிலையிலும் வாகனம் ஓட்டக்கூடாது என வலியுறுத்தியும் பாடல்கள் பாடினர்.
மேட்டுப்பாளையம் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ, மாணவிகளின் வில்லுப்பாட்டு.
நீலாம்பூர் டெக்கத்லான் விளை யாட்டு உபகரணங்கள் நிறுவனம் சார்பில், கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்துக்கான விளையாட்டுப் பொருட்கள், ஸ்கிப்பிங் கயிறு, வில் அம்பு, பூமரங், ஸ்கேட்டிங் பேட், சிறிய ஸ்கூட்டர் உள்ளிட்டவற்றை கொண்டு வந்திருந்தனர். அவற்றை இலவசமாகப் பயன்படுத்தி, ஏராளமான சிறுவர், சிறுமியர் பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர்.
முன்னதாக, ரூட்ஸ் நிறுவனத் தொழிலாளர்கள் பங்கேற்ற, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. ரூட்ஸ் நிறுவனம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட பழ மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. இதையொட்டி நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) டாக்டர் எம்.துரை பேசும்போது, “உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். அதற்கு இந்த நிகழ்ச்சி மிகவும் உதவும். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு காவல் துறை முழு ஒத்துழைப்பு வழங்கும். ‘தி இந்து’வுடன் இணைந்து இன்னும் 2 இடங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
நிகழ்ச்சியில் பழ மரக்கன்றுகளை வழங்கிய மாநகர காவல் துறை துணை ஆணையர் எம்.துரை, ரூட்ஸ் நிறுவன இயக்குநர் கவிதாசன், நடிகை ஸ்ருதி ஷண்முகப்ரியா.
ரூட்ஸ் நிறுவன இயக்குநர் கவிஞர் கவிதாசன் பேசும்போது, “வசதியாக வாழ்வதைவிட, மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம். அதற்கு ஆரோக்கியம் மிகவும் அவசியம். ‘தி இந்து’வின் ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’ நிகழ்ச்சி உடல் ஆரோக்கியத்துக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் நடத்தப்படுகிறது. ஒருவருக்கொரு வர் அன்புடன் பழகவும் கற்றுத்தரு கிறது. பள்ளி மாணவர்களை பண் புள்ளவர்களாக மாற்ற இது உதவும். நமது முன்னோர் இயற்கை யுடன் இணைந்து வாழ்ந்தார்கள். இயற்கையை தெய்வமாக வணங்கினர். ஆனால், நாம் தற்போது இயற்கையிலிருந்து விலகிவிட்டோம். எனவேதான், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்த்தலை ரூட்ஸ் நிறுவனம் வலியுறுத்தி வருகிறது” என்றார்.
இதில், ‘வாணி ராணி’ தொலைக் காட்சித் தொடர் நடிகை ஸ்ருதி ஷண்முகப்ரியா, கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்துவெங்கட்ராம், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கே.வி.சதாசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
‘தி இந்து’ நிறுவன துணைப் பொது மேலாளர் (விளம்பரம்) ஆர்.எல்.என்.சிவக்குமார் நன்றி தெரிவித்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.சீனிவாசன், தனது மகன் வேதாந்துடன் வந்திருந்தார். அவர் கூறும்போது, “பரபரப்பான இந்த சாலையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது ‘கார் ஃப்ரீ சண்டே’ மட்டும் அல்ல, ‘கேர் ஃபார் சண்டே’வும் (ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளும் ஞாயிறு) கூட” என்றார்.
காந்தி பார்க் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் நிரஞ்சன், ஜானகிராமன், பிரசாந்த், ஹரிஹரன் உள்ளிட்டோர் கூறும்போது, “நாங்கள் விளையாடுவதற்கு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்துக்குச் செல்வோம். இப்போது வீட்டுக்கு அருகிலேயே விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றனர்.
பீத்தோவன் டான்ஸ் அகாடமி சார்பில் இடம் பெற்ற நடன உடற்பயிற்சியில் பங்கேற்றோர்.