

பண மதிப்பு நீக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் அடைத்து எடப்பாடி பகுதியில் வீசப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பு நீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்தது. டிசம்பர் 31-ம் தேதி வரை பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், 2000 மற்றும் 500 ரூபாய் புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது.
பண மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற அளிக்கப்பட்ட கால அவகாசத்துக்கு பின்னர் இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் நைனாம்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை முன் பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. வெகுநேரம் மூட்டை கிடந்ததால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மூட்டையை பிரித்துப் பார்த்தனர்.
அப்போது அதில், பண மதிப்பு நீக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றை அங்கு இருந்தவர்கள் ஒன்று சேர்த்து ஒட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் பரவியதால் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.
தகவல் அறிந்த எடப்பாடி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் அடங்கிய சாக்கு மூட்டையை பறிமுதல் செய்தனர். மேலும், மூட்டையை வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் தொகுதியான எடப்பாடி பகுதியில் இந்த சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.