இளைஞர்களின் பங்களிப்புடன் தமிழகம் வளர்ச்சி அடையட்டும்: மு.க.ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து

இளைஞர்களின் பங்களிப்புடன் தமிழகம் வளர்ச்சி அடையட்டும்: மு.க.ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து
Updated on
1 min read

தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்புடம் தமிழகம் அபரிமித வளர்ச்சி பெற்று "அனைவரும் அனைத்து வசதிகளும்" பெற்று ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில், "தமிழக அரசின் சார்பிலான 68-வது குடியரசு தின விழாவில் இன்று பங்கேற்றேன். நாட்டின் ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகதன்மையே இந்தியாவின் ஒருமைப்பாட்டை காக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் ஜனநாயக பேரியக்கம் திமுக.

அதன் சார்பில் குடியரசு தின விழாவில் பங்கேற்றேன். அகில உலகத்திற்கே வழி காட்டும் வகையில் மாணவர்கள் அறப்போராட்டம் நடத்தி தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டை வென்று எடுத்த மெரினா கடற்கரையில் குடியரசு தின அணி வகுப்பு காட்சிகளை கண்டு ரசித்தேன்.

தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்புடம் தமிழகம் அபரிமித வளர்ச்சி பெற்று "அனைவரும் அனைத்து வசதிகளும்" பெற்று ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்த குடியரசு தினத்தில் அனைவருக்கும் என் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தநேரத்தில், இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். "சுதந்திர தினத்தன்று கோட்டையில் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியேற்றலாம்" என்ற உரிமையை இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் முதன்முதலில் பெற்றுத் தந்தவர் கருணாநிதி.

அவர் தி.மு.க. ஆட்சியிலிருந்த ஒவ்வொரு முறையும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்குரிய ஓய்வூதியத்தை உயர்த்திக் கொடுத்து, நாட்டுக்காகப் போராடிய அவர்களை கவுரவித்து இருக்கிறது என்பது மறக்க முடியாத கடந்த கால வரலாறு என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in