நாளை ஆசிரியர் தினம்: கருணாநிதி வாழ்த்து

நாளை ஆசிரியர் தினம்: கருணாநிதி வாழ்த்து
Updated on
1 min read

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர்களை ஏணிப்படிகள் என்பார்கள். அவர்கள் ஏணிப் படிகள் மட்டுமல்ல, கோபுர கலசங்களாகவும் உயர முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். ஆசிரியராக பணியாற்றி, தனது அறிவாற்றல், சான்றாமை குணங்களால் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர்.

அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டு தோறும் ஆசிரியர் தினமாக எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வருங்காலத் தலை முறையை அறிவு, ஆற்றல், செயல்திறன், சீரிய பண்புகள் கொண்டவர்களாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பெருமைபடுத்தப்படுகிறது.

ஆசிரியர்களின் உயர் கல்விக்கு ஊக்க ஊதியம், தமிழ் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், அகவிலைப் படிகள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு என ஆசிரியர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை திமுக அரசு வழங்கியது. கடந்த 19 ஆண்டுகால திமுக ஆட்சியில் 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கப்பட்டது.

ஆனால், ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகைகள் அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட் டன. போராட்டம் நடத்திய சுமார் 1 லட்சத்து 71 ஆயிரம் ஆசி ரியர் - அரசு ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.

சில ஆண்டுகளாக தகுதித் தேர்வை புகுத்தி, அதனையும் ஆண்டுதோறும் நடத்தாமல், ஆசிரியர் பயிற்சி பெற்ற பலர் வேலை கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் நிலையை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆசிரியர் சமுதாயம் அடைந்துள்ள இன்னல்களை எண்ணி வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் ஆசிரியர் சமுதாயத் துக்கு அரணாக விளங்கி வரும் திமுக சார்பில் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in