பெரியாறு, பேபி அணைகள் உறுதியாக உள்ளன: மூவர் குழு தலைவர் எல்.ஏ.வி.நாதன் தகவல்

பெரியாறு, பேபி அணைகள் உறுதியாக உள்ளன: மூவர் குழு தலைவர் எல்.ஏ.வி.நாதன் தகவல்
Updated on
2 min read

முல்லை பெரியாறு, பேபி அணைகள் உறுதியாக உள்ளன என்று மூவர் குழு தலைவர் எல்.ஏ.வி.நாதன் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் கடந்த 20-ம் தேதி 142 அடியை எட்டியது. 35 ஆண்டுகள் கழித்து 142 அடியை நீர்மட்டம் எட்டியதால் தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மூவர் குழு கூட்டம் கூடியது. பகல் 11.30 மணிக்கு மூவர் குழுவினர் தேக் கடியில் இருந்து அணைக்கு படகுகில் சென்றனர். 12.45 மணிக்கு மூவர் குழுவினர் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர்.

பின்னர் அதன் அருகில் உள்ள பேபி அணை பலவீனமாக இருப்பதாகவும், அதனை ஆய்வு மேற்கொள்ள வருமாறும் கேரள அதிகாரிகள் கூறினர். அணை பலமாக இருக்கிறது என கூறி கேரள அதிகாரிகள் வேண்டு மென்றே தவறான தகவலை கூறி வருகின்றனர் என எதிர்ப்பு தெரிவித்து தமிழக பொதுப்பணித் துறை செயலரும், மூவர் குழுவின் தமிழக பிரதிநிதியுமான சாய்குமார் வர மறுத்துவிட்டார். இதையடுத்து நாதனை கேரள பிரதிநிதி குரியன் பேபி அணையின் அடிவாரத்துக்கு அழைத்துச்சென்று தண்ணீர் சிறிது வழிந்தோடிய இடத்தை சுட்டிக்காட்டி கசிவுநீர் வழிந்தோடுகிறது என்றார்.

கேரள அதிகாரிகள் கூறிக் கொண்டிருந்த புகார்களுக்கு காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணி விளக்கம் அளித்தார்.

ஆய்வு முடிந்த பின் செய்தி யாளர்களிடம் நாதன் கூறுகையில், பெரியாறு அணையும், பேபி அணையும் உறுதியாக உள்ளன. ஷட்டர்களும் நல்ல முறையில் இயங்கிவருகின்றன என்றார். இதனையடுத்து குமுளியில் மாலை 5 மணி அளவில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக, கேரள பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

142 அடியை தாண்டிய பிறகு நேற்று தமிழக, கேரள அதிகாரிகள் அணைப்பகுதிக்கு சென்றதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க கேரள போலீ ஸார் தேக்கடியில் நிறுத்தப்பட்டி ருந்தனர். தமிழக செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் தங்கள் அடையாள அட்டையை காட்டிய பிறகே படகுத்துறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்: சாய்குமார்

பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என்று தமிழக பொதுப் பணித் துறை செயலர் சாய்குமார் தெரிவித்தார்.

‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதை சொல்ல வார்த்தைகள் இல்லை.

நீர்மட்டத்தை 152 அடியாக தேக்குவது எப்போது?

விரைவில் அதற்குண்டான பணி மேற்கொள்ளப்படும்.

பெரியாறு அணையில் இருந்து அதிக நீரை வெளியேற்றி வைகை அணையில் நீரை தேக்க கேரளம் கூறுவது பற்றி?

தற்போது மழை பெய்யும் காலம். இப்போது தண்ணீரை அங்கு தேக்கினால் மழை பெய்யும்போது வைகை நீர் வீணாகி கடலில் கலக்கும் நிலை உருவாகும். டிசம்பர் கடைசி வரை மழை பெய்யாவிட்டால் வைகையில் அதிகமாக நீர் தேக்கப்படும்.

கேரள அரசு தொடர்ந்து அணையை பற்றி ஏதாவது குறை கூறி வருவதைப் பற்றி?

அணை பலமாக இருக்கிறது. அவர்களது புகார்கள் பற்றி கவலையில்லை, 152 அடியாக நீர் தேக்குவதே எங்கள் கடமை.

அணை பகுதியில் கேரள எம்எல்ஏக்கள் அத்துமீறல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எம்எல்ஏ, எம்.பி. என இனி யாரையும் கண்டிப்பாக வரவிடக்கூடாது என தமிழக அதிகாரிகளுக்கு கூறியுள்ளேன். அவர்கள் மீண்டும் அனுமதியில்லாமல் நுழைந்தால் அதனை பதிவு செய்யக் கூறியுள்ளேன். அது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

தேக்கடியில் பல மாதங்களாக இயக்கப்படாமல் தமிழக பொதுப் பணித் துறையின் புதிய இரும்புப் படகு தமிழ் அன்னை நிறுத்தப்பட்டுள்ளதே?

பைபர் படகு ஒன்று தயாராகி வருகிறது. இதற்கு பென்னிகுக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படகும் தமிழ் அன்னை படகும் டிச. 15-ம் தேதிக்கு மேல் இயக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in