

கோயம்பேடு பேருந்து நிலையத் தில் இருந்து பூந்தமல்லி வழி யாக வெளியூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் திடீரென மாற்றப்பட்டு வேலப்பன் சாவடி வழியாக பூந்தமல்லி புறவழி சாலைக்கு (பைபாஸ்) இயக்கப்படுகின்றன. எனவே, பூந்தமல்லி வரை இயக்கப்படும் மாநகர பேருந்துகளை பூந்தமல்லி புறவழி சாலை வரை இயக்க வேண்டுமென வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவை வழியாக வாசகர் கே.புருஷோத்தமன் கூறியிருப்பதாவது:
கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி வழியாக காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூருக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் கடந்த சில வாரங்களாக மதுரவாயல், வேலப்பன்சாவடி வழியாக இயக்கப்படுகின்றன. பூந்தமல்லி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி இந்த மாற்றம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது வரவேற்கக் கூடிய திட்டம்தான்.
வேலைக்கு செல்வோர்..
ஆனால், பூந்தமல்லி புறவழிச் சாலையை இணைக்கும் வகையில் மாநகர பேருந்துகள் இயக்காமல் இருக்கின்றன. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் அவதிப் படுகின்றனர். எனவே வெளியூர் பேருந்துகளை நிறுத்தும் இடத்தில் இருந்து போதிய மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும், பிராட்வேயில் இருந்து பூந்தமல்லிக்கு இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் கணிசமான பேருந்துகளை புறவழிச்சாலை வரையில் இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரி விளக்கம்
இது தொடர்பாக அரசு போக்கு வரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பயணிகளின் புகார்களை நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளோம். மேலும், பயணிகளின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கவும், அந்த வழியாக மாநகர பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.