Published : 17 Jan 2014 18:38 pm

Updated : 06 Jun 2017 18:18 pm

 

Published : 17 Jan 2014 06:38 PM
Last Updated : 06 Jun 2017 06:18 PM

பெரம்பலூர்: சுண்ணாம்பு சூளையில் வேகும் தொழிலாளர்கள் வாழ்வு மீளுமா?

பொங்கல் பண்டிகையையொட்டி அடையாளமாக ஆண்டுதோறும் வீட்டிற்கு வெள்ளையடிக்கும் வழக்கம் ஒரு காலம் வரை இருந்தது. நவீன வேதிப்பொருள்களின் கலவையில் டிஸ்டெம்பர், பெயிண்ட்கள் வரத்து ஏற்பட்டதும், வெள்ளையடித்தல் வழக்கொழிந்து வருகிறது. இதனால், வெள்ளையடித்தலுக்கான சுண்ணாம்பு தயாரிக்கும் தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பாரம்பரிய தொழிலை விடவும் முடியாத, தொடரவும் முடியாத துயரத்திலிருந்து மீள வழிதெரியாமல் தவிக்கின்றனர்.

மண்ணில் அகழ்ந்து கிடைக்கும் சுண்ணாம்புக்கல்லில் இருந்து சுவர்களை அலங்கரிக்கும் வெள்ளையடித்தல் என்பது, உண்மையிலேயே வெயிலை விரட்டி, வீட்டிற்குள் குளிர்ச்சி தரும். அதனால்தான் போகிக்குள் வெள்ளையடித்து வருடாந்திரம் வீட்டை புதுப் பொலிவாக்குவது தமிழர் மரபாக இருந்தது.


நவீன வேதிப்பொருள்களின் கலவையில் தயாரான பல வண்ண பூச்சுக்களை குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூசினால் போதும் என்ற வழக்கத்தை விதைத்தும், பாரம்பரிய சுண்ணாம்பு தொழில் சுருண்டது.

“அந்த கவர்ச்சியான பூச்சுகளில் சுற்றுச்சூழலுக்கு கெடுதியான வேதி நச்சுக்கள் நிறைந்திருப்பதையும், வெயிலை பிரதிபலித்து குளுமை தருவதில் பாரம்பரிய சுண்ணாம்புக்கு அது ஈடில்லை என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்.

நவீன வண்ண மினுக்குகளுக்கு ஈடு கொடுத்து இந்த வெள்ளை சுண்ணாம்பில் தேவையான வண்ண சாயங்களை சேர்த்து சுவர் பூச்சாக பயன்படுத்த யாரும் முன்வருவதில்லை. அதனால்தான், ஒரு காலத்தில் வாசலில் வரிசை கட்டிய ஆர்டர்களை எடுக்கத்திணறிய காலம் போய் வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் சூளையில் பூனை தூங்குது” என்கிறார் பம்பா.

அரியலூர் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏகபோகமாக ஏராளமான குடும்பங்களை வாழ்வித்த சுண்ணாம்பு சூளை தொழிலில் தற்சமயம் ஒரு சிலரே தொடருகின்றனர். பம்பா அவர்களில் ஒருவர். சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளான சுண்ணாம்புக்கல்லில் இருந்து வெள்ளையடிக்கும் சுண்ணாம்பை தயாரிக்கும் தொழிலை பாரம்பரியமாக தலைமுறைகள் தாண்டி தொடரும் குடும்பம் இவர்களுடையது.

சுண்ணாம்பு என்றால் சுவற்று பூச்சுக்கான சுண்ணாம்பு மட்டுமல்ல, வெற்றிலை சுண்ணாம்பு, வெல்லம் பதம் காணுவதற்கான சுண்ணாம்பு, ப்ளீச்சிங் பவுடருக்கான சுண்ணாம்பு என்று பல மாற்று உத்திகளில் தங்கள் தொழிலை தொடர்வதாலேயே பம்பா போன்றோரின் சூளையும், வீட்டு அடுப்பும் தொடர்ந்து எரிய வாய்ப்பாகிறது.

இத்தனை தயாரிப்பிற்கும் இவர்கள் அரியலூர் சுண்ணாம்பு சுரங்கங்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை. கடலூர் பக்கமிருந்து நத்தை ஓடு, கிளிஞ்சல் என டன் கணக்கில் சீசனில் வாங்கி வைத்து ஆண்டு முழுமைக்கும் பயன்படுத்துகிறார்கள். சுண்ணாம்பின் தேவை வெற்றிலைக்கா சுவற்றுக்கா என்பதைப் பொறுத்து சேர்மானப் பொருளகளின் விகிதம் மாறுபடும். சுட்டு, வேகவைத்து, பாடம் செய்து சரியான பதத்தில் தயாராகும் சுண்ணாம்பை, வாசனை சுண்ணாம்பு தயாரிக்க வாங்கிச் செல்கிறார்கள்.

இன்றும் கூட காங்கிரீட் வீடுகளின் மேல் தளங்களில் சுண்ணாம்பு பூச்சுக்காக இவர்களை தேடி வரும் விபரமறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எண்ணிகை சொற்பம் என்பதுதான் வேதனை.

கிளிஞ்சல் சரியான விலையில் கிட்டும்போது எரியூட்டுவதற்கான மரக்கரி, தேங்காய் சிரட்டை போன்றவை விலை எட்டாத இடத்தில் இருக்கும். இரண்டும் தகையும் போது மழை வந்து சூளையை மூழ்கடிக்கும். ஆனபோதும் ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த தொழில் என்பதால் இன்னமும் இதை விட்டு விலகி இன்னொருவரின் கீழ் வெளி வேலைக்கு கூலியாக தயங்கியே இவர்களின் பிழைப்பு சூளையை இன்று வரை வலம் வரச்செய்கிறது.

“சுண்ணாம்புச் சூளையை நம்பியவர்களின் எண்ணிக்கை அருகிப்போனதற்கு காரணம், வருமானக் குறைவு மட்டுமல்ல; சுண்ணாம்பு சூளை என்பது பட்டாசுத் தொழில் போல சுவாசத்தில், உமிழ்நீரில் கரைந்து உயிர் உரிஞ்சும் தொழிலும் கூட.

“சூளை சூடு மட்டுமில்லைங்க… சுண்ணாம்பு புகைச்சல், ஆவி எல்லாம் நுரையீரல், குடல்னு பரவி அப்டியே ஊறிப்போய் ஆயுசை கரைச்சிடும். ஆனாலும் இந்த தொழிலை தொடர்ந்து செய்யறோம்னா பாரம்பரிய தொழில் மேல இருக்குற பிடிப்புதான் காரணம். நச்சு பூச்சுக்கும், மனசு மயக்கும் பளிச் வெள்ளைக்குமான வித்தியாசத்தை உணர்ந்து மக்கள் மனசு மாறணும். அரசாங்கம் லோன் உதவி தருதோ இல்லையோ குறைந்த பட்சம் ப்ளீச்சிங் பவுடர் சுண்ணாம்புக்கான ஆர்டருக்காவது எங்களை மாதிரியான பாரம்பரிய சூளைக்காரங்களுக்கு கைகொடுக்கனும்.

இல்லேன்னா, இதுவே சுண்ணாம்பு சூளையோட கடைசி தலைமுறையோட மூச்சா இருக்கும்” என்கிறார் பம்பா.

பொங்கலை விடுவோம், வரும் வெயிலுக்கு வீட்டு தளத்திற்கேனும் வெள்ளையடித்து பார்ப்போமா?. பாரம்பரிய சுண்ணாம்பின் வெண்மையை உணர்வோமா?


பொங்கல் பண்டிகைடிஸ்டெம்பர்பெயிண்ட்கள்வெள்ளையடித்தல்ம்சுண்ணாம்பு தயாரிக்கும் தொழில்சுண்ணாம்பு சூளைஅழியும் தொழில்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x