

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டத்தை முதல் வர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். அதன்படி, மாநகர போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் பணிமனை என 42 இடங்களில் மூத்த குடிமக்கள் இலவச பஸ் பாஸ் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 514 பேர் பஸ் பாஸ்களை பெற்றனர். இலவச பயணத்துக்கான டோக்கன்களையும் பெற்றுச் சென்றனர். இந்நிலையில் பஸ் பாஸ்களை புதுப்பிப்போரின் எண்ணிக்கையில் தற்போது 46,778 பேர் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “இத்திட்டத்தை தொடங்கும்போது வயது மற்றும் இருப்பிடச் சான்றுக்காக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. சிலர் இதை தவறாகப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட இலவச பஸ் பாஸ்களை பெற்றதாக புகார்கள் வந்தன. இதையடுத்து பாஸை புதுப்பிக்கும்போது, குடும்ப அட்டை மட்டுமே இருப்பிட சான்றாக பெறப்படுகிறது.
அதன்படி இதுவரையில் 1,81,736 பேருக்கு இலவச பஸ் பாஸ்கள் புதுப்பித்து வழங்கப் பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை குறைந்ததற்கு போலி பாஸ்கள் நீக்கப்பட்டுள்ளதே முக்கிய காரணமாகும். மேலும் தற்போது சென்னை பெருநகர் வரையில் மட்டுமே மூத்த குடிமக்களுக்கான பாஸ் வழங்குவதாலும் அதைப் புதுப்பிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்றனர்.