திமுகவின் போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

திமுகவின் போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு
Updated on
1 min read

திமுக சார்பில் புதன்கிழமை நடைபெற உள்ள உண்ணாநிலைப் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி அன்று நடைபெற்ற வாக்கெடுப்பின் போது நடைபெற்ற ஜனநாயக விதிமீறல்களைக் கண்டித்து திமுக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானம் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் நிறைவேற்றப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமானது.

பேரவைத் தலைவர் சபையை ஒத்திவைத்துவிட்டு சபையை விட்டு வெளியே சென்றபிறகு சபைக் காவலர்களால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவினர் தாக்கப்பட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்படும் வரை சபையில் இருந்திருக்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயக விதிமீறல்களைக் கண்டித்தும் திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள உண்ணாநிலைப் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது.

திமுக சார்பில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆதரவு தெரிவிப்பார்கள்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in