மத்திய அரசை கண்டித்து செப். 2-ல் வேலைநிறுத்தம்: 7 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து செப். 2-ல் வேலைநிறுத்தம்: 7 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
Updated on
1 min read

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்தும் வரும் செப்டம்பர் 2-ல் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக சிஐடியு, எல்பிஎப் உட்பட 7 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக ஜி.காளன் (ஐஎன்டியுசி), மு.சண்முகம் (எல்பிஎப்), டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி), மா.சுப்பிரமணிய பிள்ளை (எச்எம்எஸ்), கே.திருச் செல்வன் (சிஐடியு), ஜி.முனுசாமி (ஏஐசிசிடியு), ஏ.மோகன்ராஜ் (ஏஐயுடியுசி) ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டம் கடந்த 12-ம் தேதி சென்னையில் உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் நடந்தது. இதில், 7 மத்திய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மத்திய அரசின் தவறான கொள்கைகளைக் கண்டித்தும், தொழிலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தியும் செப்டம்பர் 2-ல் நாடு தழுவிய போராட்டம் நடத்த டெல்லியில் நடந்த மாநாட்டின் முடிவின்படி தமிழகத்தில் வேலைநிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதையொட்டி, வரும் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில் மொத்தம் 11 மாவட்டங்களில் மாவட்ட அளவில் வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து மாவட்டங்கள் வாரியாக அடையாள ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆகஸ்ட் 3-வது வாரத்தில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். ஆகஸ்ட் 14-ம் தேதி சட்டப்படி வேலைநிறுத்த நோட்டீஸ் அனுப்பப்படும். எங்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வருக்கு அனுப்பி, மாநில அரசை வேலைநிறுத்ததுக்கு ஆதரவு கேட்கவும் முடிவு செய்துள்ளாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in