திமுக செயல் தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார்: வாசன் வாழ்த்து

திமுக செயல் தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார்: வாசன் வாழ்த்து
Updated on
1 min read

தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலே திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என்று ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திமுக செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் இளம் வயது முதலே திமுகவில் மாணவர் அணி, இளைஞர் அணி, வட்டப் பிரதிநிதி என படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் சென்னை மாநகராட்சி மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக, சட்டமன்ற எதிர் கட்சித் தலைவராக ஸ்டாலினின் பணி பாராட்டுக்குரியது, சிறப்புக்குரியது.

அந்த வகையில் கருணாநிதியின் ஆசியோடு இன்று ஸ்டாலின் ஏற்றிருக்கும் பொறுப்பில் - தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலே சிறப்பாக செயல்படுவார்.

ஸ்டாலினின் கழகப்பணி, மக்கள் பணி தொடர, வளர, சிறக்க நல்வாழ்த்துகள்'' என்று வாசன் கூறியுள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்மொழிய தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

அப்போது அன்பழகன், "திமுக செயல் தலைவராக ஸ்டாலின் ஏக மனதாக தேர்வு செய்யப்படுகிறார். அவர் தற்போது வகித்துவரும் பொருளாளர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in