

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை கட்சியின் இணைய தளம், நோட்டீஸ், சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக பதிலளிக்க அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளருமான டிடிவி. தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் டிடிவி தினகரனுக்கு நேற்று ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
"அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. இணையதளம், சமூக வலை தளங்கள், டிஜிட்டல் பேனர்கள் போன்ற எதிலும் பயன்படுத்தக் கூடாது. இதை மீறி பயன்படுத்தினால் இந்திய தண்டனைச் சட்டம் 171-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து வருகிற 6-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.