

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமை யாளர் மதன், 5 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை தன்னுடைய லெட்டர் பேடில் எழுதி வைத்துவிட்டு கடந்த மே மாதம் 27-ம் தேதி மாயமானார். அவர் எங்கிருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.
மதன் மற்றும் அவரது கூட்டாளிகள் மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கியுள்ளனர். இதுதொடர்பாக மொத்தம் 112 பேர் கொடுத்துள்ள புகாரில் ரூ.75 கோடி மோசடி செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதன் எழுதியிருந்த கடிதத்தில் தான் வாங்கிய பணத்தை எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து பச்சமுத்து மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 26-ம் தேதி பச்சமுத்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு பச்சமுத்து தாக்கல் செய்த மனு சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங் களை கேட்ட மாஜிஸ்திரேட் நாளைக்கு (1-ம் தேதி) வழக்கை ஒத்திவைத்தார்.
மாணவர்கள் அளித்த பண மோசடி குறித்தும், மாயமான மதன் குறித்தும் பச்சமுத்துவிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, பச்சமுத்துவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிரகாஷ், பச்சமுத்துவை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இன்று காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.