கிரானைட் குவாரி ஆய்வில் நீடிக்கும் குழப்பங்கள்: தள்ளிப்போகிறது சகாயம் குழு விசாரணை

கிரானைட் குவாரி ஆய்வில் நீடிக்கும் குழப்பங்கள்: தள்ளிப்போகிறது சகாயம் குழு விசாரணை
Updated on
2 min read

கிரானைட் குவாரி விசாரணை தொடர்பாக தெளிவான வழி முறைகள் இல்லாததால், சகாயம் தனது விசாரணையை நேற்று தொடங்கவில்லை. இது மேலும் ஒரு வாரம் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிரானைட் வெட்டி எடுத்ததில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந் திருப்பதாக அப்போதைய ஆட்சியர் சகாயம், தமிழக அரசுக்கு 2011-ல் அறிக்கை அனுப்பினார். பின்னர் மேல் விசாரணை நடத்தப் பட்டு, ஒலிம்பஸ், பி.ஆர்.பி. உட்பட 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பி.ஆர்.பி. கிரானைட்ஸ் உரிமையா ளர் பழனிச்சாமி உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.

பொதுநல வழக்கு

கிரானைட் முறைகேடு தொடர் பாக ஏற்கெனவே சகாயம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்ததால், தற்போதும் அவரையே விசாரணை அதிகாரியாக நியமிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதை நீதிமன்றம் விசாரித்து, சகாயம் தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவிட்டது. 2 மாதங் களுக்குள் விசாரணை அறிக்கை யைத் தாக்கல் செய்யவும் உத்தர விட்டது.

சகாயம் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையில் சகாயத் துக்குத் தேவையான உதவிகளை செய்து தருமாறும் அரசுக்கு உத்தர விட்டது. இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கு அரசு உரிய உத்தரவுகள் பிறப்பித்தன. சகாயம் குழு விசாரணைக்கு அனுமதி வழங்கி அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சகாயத்துக்கு மதுரை யில் அலுவலகம் தயாராகிவிட்டது. ஆனாலும், சில தெளிவான வழி முறைகள் இல்லாததால் விசாரணை யைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

பணி விடுவிப்பு இல்லை

அறிவியல் நகரத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, கிரானைட் விசாரணையைத் தொடங்கு வார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர், சில முன்னுதாரணங்க ளைக் கூறிய அரசு, தற்போதைய பணியில் இருந்து விடுவிக்கப்படா மலேயே ஆய்வுப் பணியை மேற் கொள்வார் என்று அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து சகாயம், மதுரைக்கு விமானத்திலோ, ரயிலிலோ சென்றால் அதற்கான செலவை உடனடியாக யார் ஏற்பது? அவர் சென்னை அலுவலகத்துக்கு வந்துசெல்வதற்கான கட்டணத்தை எங்கிருந்து திரும்பப் பெறுவது? என்று செலவினங்களை ஏற்பதில் சில குழப்பங்கள் நிலவுகின்றன.

சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு (கன்மென்) அளிக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சிறிய கைத்துப்பாக்கி வைத்திருக்கும் ஆயுதப்படைக் காவலர்கள் 2 பேர் சுழற்சி முறையில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கின்றனர். சகாயம் ரயிலில் போனால் மட்டுமே அவர்கள் உடன் செல்லலாம். விமானத்தில் உடன் செல்ல முடியாது.

மதுரையில் மட்டுமா விசாரணை?

எல்லாவற்றுக்கும் மேலாக, மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆய்வு செய்தால் போதுமா, தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தவேண்டுமா என்று அவருக்கு தெளிவாகத் தெரிவிக் கப்பட வில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. 2 மாதத்துக்குள் தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தி அறிக்கை அளிப்பது சாத்தி யமா என்ற கேள்வியும் எழுகிறது.

அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவர் விசாரணையைத் தொடங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், விசா ரணை தொடர்பாக பல்வேறு குழப் பங்கள் நிலவுவதால் அவர் நேற்று ஆய்வைத் தொடங்கவில்லை. விசாரணையைத் தொடங்குவது ஒரு வாரம் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

டிராபிக் ராமசாமி புதிய மனு

தமிழகத்தில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி, இதர மாவட்டங்களிலும் உள்ள கிரானைட், தாது மணல் மற்றும் ஆற்று மணல் குவாரிகளிலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் வகையில் சகாயம் ஐஏஎஸ் ஆய்வு செய்வதற்கு ஏதுவாக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும், எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தினை டிராபிக் ராமசாமி அணுகியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அரசு மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதி மன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சகாயத்துக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு கூறி, மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அரசு கடிதத்தை அனுப்பியுள்ளது. அது போதாது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குவாரிகளை சகாயம் ஐஏஎஸ் ஆய்வு செய்யவும், தேவைப்பட்டால் முறைகேடான குவாரிகளுக்கு சீல் வைக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தேவையான உத்தரவை அரசு பிறப்பிக்கவேண்டும் என்பதற்காகவே இம்மனுவை தாக்கல் செய்துள்ளேன்’’ என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in