Published : 20 Jun 2015 08:58 AM
Last Updated : 20 Jun 2015 08:58 AM

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிய மனு தள்ளுபடி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை பொதுநல வழக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், அசாம், பிகார் ஆகிய மாநிலங்களில் கூடுதலாக எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என மத்திய அரசு பிப்ரவரி 2015-ல் அறிவித்துள்ளது. 2021-ல் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை வருவதற்காக கூடுதல் இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் 3 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் தான் உள்ளார். இதனால், மக்களுக்கு போதிய மருத்துவ உதவி கிடைப்பதில்லை.

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பல மருத்துவமனைகள் உள்ளன. தமிழகத்தில் 15 தென்மாவட்டங்களுக்கு மையமாக இருக்கும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு போதிய வசதிகள் உள்ளன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தால், மருத்துவ உதவியின் தரம் மேம்படும். எனவே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெருந்துறை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் மத்திய குழு ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யும். மதுரையில் அமைக்க உத்தரவிட்டால், மற்ற பகுதியைச் சேர்ந்தவர்களும் தங்கள் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கோரி நீதிமன்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x