

கடலில் எண்ணெய் படலம் பரவிய செய்தியை தொடர்ந்து மீன் வாங்கச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால் பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் சங்கர் கூறும்போது, “கடந்த 3 நாட்களாக பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மிதந்து வருகிறது. அலைகள் மூலம் அடித்துவரப்படும் இந்த எண்ணெய் படலம் கருப்பு நிறத்தில் கரை முழுவதும் திட்டுத் திட்டாக படிந்துள்ளது. மீன்பிடிக்க செல்லும்போது கை, கால்களிலும் எண்ணெய் படலம் ஒட்டிக்கொள்கிறது. கடலில் சுமார் 6 கி.மீ. தொலைவு வரை எண்ணெய் படலம் இருக்கலாம். ஆனால், ஆழ்கடலுக்கு சென்று நாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும், எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை எண்ணெய் படலம் பரவியுள்ளது என ஊடகங்களில் வரும் செய்தியை பார்த்துவிட்டு பொதுமக்கள் மீன் வாங்குவதை குறைத்துவிட்டனர்” என்றார்.
பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி நீலாவதி கூறும்போது, “கடலில் மிதக்கும் எண்ணெய் படலம் குறித்து செய்திகள் வெளியானதை தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை முதல் மீன் வியாபாரம் பெருமளவு குறைந்துவிட்டது. வாங்கிவரும் மீன்கள் விற்பனையாகாமல் அப்படியே தேங்கியுள்ளன. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்” என்றார்.