Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM

அரசியல்வாதிகள் 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல்: சிறப்புத் தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அரசியல்வாதிகள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டுசென்றால் அது பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக சிறப்புத் தலைமை அதிகாரி கார்த்திக் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருடன் புதன்கிழமையன்று முதல் முறையாக நிருபர்களைச் சந்தித்த கார்த்திக் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக வரும் புகார்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுச் சொத்துக்களில் (அரசு கட்டிடங்கள்) விதிகள் மீறியது தொடர்பாக 34,254 புகார்களும், தனியார் சொத்துக்கள் தொடர்பாக 20,722 புகார்களும் என மொத்தம் 54,976 புகார்கள் பதிவாகியுள்ளன.

இதில், விதிகளை மீறி விளம்பரங்கள் எழுதப்பட்டது தொடர்பாக மட்டும், 52,558 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

பறக்கும் படை

பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனைகளில் இதுவரை ரூ.10 கோடியே 25 லட்சத்து 69,324 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பறக்கும் படை பறிமுதல் செய்தது ரூ.5.367 கோடியாகும். நிலை கண்காணிப்புக்குழு மூலம் ரூ.4.89 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் அல்லாத இதர பொருட்களின் மதிப்பு 1,104 கோடியாகும்.

தமிழகத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றில் தலா 705 பேர் வீதம் 1410 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 3 ஷிப்ட்களில் தினசரி பணிபுரிகின்றனர். ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு தலா 18 பேர் வீதம் 36 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படையில் ஆட்களை தேவைப்பட்டால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கூடுதலாக அமர்த்திக் கொள்ளலாம்.

தலைவர்கள் சிலை

அரசியல் தலைவர்களின் சிலைகளைப் பொருத்தவரை மறைந்த தலைவர்களின் உருவச்சிலைகளை மூடி மறைக்கத் தேவையில்லை என்பதே தேர்தல் ஆணையத்தின் உத்தரவாகும். இதுதவிர, சில தலைவர்களின் சிலை தொடர்பாக தனிப்பட்ட உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ரூ.10 லட்சம் மேல் இருந்தால்

பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக பல்வேறு வர்த்தக அமைப்புகளிடமிருந்து புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசியல்வாதிகள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் கண்டிப்பாக பறிமுதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள், உரிய ஆவணங்களுடன் ரொக்கப் பணம் கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கக்கூடாது.

வர்த்தகர்கள், தாங்கள் கொண்டு செல்லும் பொருள் அல்லது ரொக்கம், வர்த்தக நோக்கத்துக்காகத்தான் கொண்டு செல்லப்படுகிறது என்பதை உறுதி செய்யும் ஆவணத்தினை வைத்திருக்க வேண்டும். அது எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான அத்தாட்சியும், அந்த பணம் அல்லது பொருளுக்கு உரிய வரி செலுத்தப்பட்டுள்ளது என்பதற்கான அத்தாட்சியையும் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இல்லாதபோதுதான் அந்த பணம் அல்லது பொருள் பறிமுதல் செய்யப்படும். இதை மீறி பணம் பறிமுதல் செய்தால் அந்த ஊழியர்கள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது உண்மையாக இருந்தால் அங்கேயே உடனே திருப்பிக் கொடுத்துவிடலாம்.

அதேநேரத்தில் ரூ.10 லட்சத்துக்கு மேல் கொண்டு போனால் அது பற்றி வருமானவரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து சோதனை மேற்கொள்வர். அவர்களிடம் உரிய ஆவணத்தைக் காட்டி பணத்தை எடுத்துச் செல்லலாம். அதற்கு 2 அல்லது 3 மணி நேரம் ஆகக்கூடும். அதுபோன்ற நேரங்களில் பொதுமக்கள் கொஞ்சம் பொறுத்தருளவேண்டும்.

தேர்தல் பண விநியோகத்துக்காக அரசியல்வாதிகள் வெளிநாட்டில் இருந்து தங்கக் கட்டிகளைக் கொண்டு வர முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, கடலோர பாதுகாப்புப் போலீஸாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடலூரில் அமைச்சர் மீது வந்துள்ள புகார் தொடர்பாக ஆட்சியரிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம். அவர் அறிக்கை கொடுத்ததும் அது பற்றி முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு கார்த்திக் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x