

குழந்தையின் வளர்ச்சிக்கு தாயைப் போலவே தாய் மொழியும் முக்கியம் என்று வாவறை பள்ளி ஆண்டு விழாவில் எழுத்தாளர் குமரி ஆதவன் பேசினார்.
வாவறை சகாய மாதா ஆங்கிலப் பள்ளியின் நாற்பதாவது ஆண்டு விழா நடைபெற்றது. பங்குப் பணியாளர் மரிய ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைமை யாசிரியை மெர்சி ஆன்றணி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். தாளாளர் செலஸ்டா, மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்லசுவாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜஜெயன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜாண்சன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கார்மெல்சபை தலைமைச் சகோதரி அமலோர் மேரி பரிசுகள் வழங்கினார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எழுத்தாளர் குமரி ஆதவன் பேசியதாவது:
ஆங்கில வழிப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தாய் மொழியைப் பிழையின்றி எழுதத் தடுமாறுகிறார்கள். விடுப்பு விண்ணப்பம் எழுதவே விழி பிதுங்கி நிற்கிறார்கள். தாய் மொழியில்தான் கனவு காணவும் சிந்தனை செய்யவும் முடியும். ஆகவே, ஆங்கிலத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தாய் மொழிக்கும் கொடுங்கள்.
ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு தாய் எப்படி முக்கியமோ அதுபோல் தாய்மொழியும் முக்கியம் ஆகும்.
நன்னெறிக் கல்வி
தாயின் ஊக்குவித்தலில் தான் தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்துக்கும் மேலான கண்டு பிடிப்புகளை நிகழ்த்தினார். அறம் சார்ந்து வளர்க்கப்படும் குழந்தைகள்தான் நேர்மையான தலைவர்களாக உருவெடுப்பார்கள். ஆகவே, பள்ளிகள் நன்னெறி கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். அப்போதுதான் சாதனையாளர்கள் நமக்கு கிடைப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அருட்சகோதரிகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.