

மதுரை மாநகராட்சி அதிமுகவில் புறநகர் மற்றும் மாநகர் மாவட்டங்கள் வருவதால் கவுன்சிலர் சீட்டு பங்கீடுவதிலும், யார், யாருக்கு சீட் வழங்குவது என்பதை நிர்ணயிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி அதிமுகவில் புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட 24 வார்டுகளும், மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட 76 வார்டுகளும் உள்ளன. மாநகர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் செல்லூர் ராஜூவும், புறநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் மேயரும் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பாவும் இருக்கின்றனர். இருவரும் பொது மேடைகளில் ஒன்றாக காட்சியளித்தாலும் கட்சி செயல்பாடுகளில் தனித்தனி அணியாகவே செயல்படுகின்றனர். அதனால், மாநகர அதிமுகவில் அமைச்சர், முன்னாள் மேயர் அணி என தற்போதைய கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பிரிந்துக் கிடக்கின்றனர். இந்த முறை மாநகராட்சி மேயரை கவுன்சிலர்களே வாக்களித்து தேர்வு செய்வதால் கவுன்சிலர் தேர்தலில் இந்த முறை முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் வாய்ப்புள்ளது. ஆனால், மேயர் பதவிக்கான வேட்பாளரை மாவட்டச் செயலாளர் அடிப்படையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவே பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. அவர், தனக்கு போட்டியாக மாநகரில் முக்கிய நபர்களை அந்த பதவிக்கு கொண்டு வர விரும்புவாரா என்பது தெரியவில்லை.
அதனால், கடைசி நேரத்தில் சாதாரண நபர்களுக்கு கூட மேயர் வாய்ப்பு கிடைக்கலாம் என்பதால் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆதரவாளர்கள் அமைச்சரை கவர அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் வீடு முதல் அவர் செல்லும் பொது, கட்சி நிகழ்ச்சிகள் வரை தவறாமல் பங்கேற்று தங்கள் விசுவாசத்தை காட்டி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டச் செயலாளர் அடிப்படையில் கவுன்சிலர் வேட்பாளருக்கு மாவட்டச் செயலாளர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், மதுரை மாநகராட்சியில் மாநகர், புறநகர் மாவட்டங்கள் இணைந்து இருப்பதால் கவுன்சிலர் சீட்டுகளை பங்கிடுவதிலும், யார், யாருக்கு சீட் வழங்கலாம் என்பதை நிர்ணயிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது;
மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்தாலும் அமைச்சர், இந்த முறை 100 வார்டுகளிலும் யார் யாருக்கு சீட் வழங்கும் முடிவை தன்னிச்சையாக நிர்ணயிக்க முடியாது. புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட 24 வார்டுகளிலும் கவுன்சிலர் சீட் வழங்குவதை புறநகர் மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் ராஜன் செல்லப்பாவுக்கே அதிகாரம் இருக்கிறது. மாநகர் மாவட்டச் செயலாளர் அடிப்படையில் அமைச்சர் 76 வார்டுகளில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்குவதில் முன்னுரிமை தர வாய்ப்புள்ளது. மேலும், மாநகருக்குட்பட்ட வடக்கு தொகுதி எம்எல்ஏவாக ராஜன் செல்லப்பா இருப்பதால் அவரது தொகுதிக்குட்பட்ட மாநகர் 18 வார்டுகளிலும் யார் யாருக்கு சீட் வழங்கலாம் என்பதை அவரே முடிவு செய்யலாம் எனக்கூறப்படுகிறது. இதனால், ராஜன் செல்லப்பா, அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இணையாக 42 வார்டுகளுக்கு கவுன்சிலர் சீட் யாருக்கு வழங்கலாம் என்பதை முடிவு செய்ய வாய்ப்புள்ளது. அதற்கு அமைச்சர் விட்டுக்கொடுப்பாரா என தெரியவில்லை.
அதனால், மதுரை மாநகராட்சி அதிமுகவில் 100 வார்டுகளில் கவுன்சிலர் சீட் பங்கீடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே புறநகர் மாவட்டச் செயலாளர் அடிப்படையில் புறநகர் ஒன்றிய சேர்மன், பேரூராட்சி தலைவர், கவுன்சிலர் சீட்டுகளுக்கு வேட்பாளரை பரிந்துரைக்கும் அதிகாரம் பெற்றுள்ள ராஜன் செல்லப்பாவுக்கு மாநகரில் 42 வார்டுகளில் கவுன்சிலர் வேட்பாளரை பரிந்துரைக்கும் அதிகாரமும் கிடைக்கும்பட்சத்தில் மதுரை அதிமுகவில் அவர் கொடி மேலும் உயர பறக்கலாம்.
அதனால், உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தற்போதே கட்சித் தலைமைக்கு மதுரை அதிமுக மாவட்ட நிர்வாகிகள் புகார் மேல் புகார் சென்ற வண்ணம் இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.