Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

பிப்.2-ல் புதிய கொங்கு கட்சி உதயம்

கொ.மு.க.-விலிருந்து விலகிய ஜி.கே.நாகராஜ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறது. அதற்கான முறையான அறிவிப்பு வரும் 2-ம் தேதி தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

முன்னாள் கொ.மு.க நிர்வாகிகள் 51 பேரின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. கொங்கு மண்டலத்தில் வாழும் அனைத்து மக்களின் குடும்ப கலாசாரம், பண்பாட்டைப் பாது காத்து தமிழ்நாட்டின் ஆதாரமாக உள்ள குடும்ப அமைப்பு முறையை காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கையை முதன்மையாக கொண்டும், விவசாயம் தொழில் மற்றும் நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த அரசியல்ரீதியாக மக்களை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வு எற்படுத்தவும் கொங்கு நாட்டில் ஜி.கே.நாகராஜ் தலைமையில் புதிய அரசியல் இயக்கம் தொடங்குவது என முடிவு எடுக்கப்பட்டது.

கட்சியின் பெயர், கொடி, கொள்கை மற்றும் கோட்பாடுகள் வரும் 2-ம் தேதி கட்சி தொடங்கும் நாளில் அறிவிக்க முடிவு செய்யப்பட்டது’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய கட்சி ஆரம்பிப்பது குறித்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டோரிடம் பேசியபோது,

“புதிய கட்சிக்கு தலைவராக ஜி.கே.நாகராஜ் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். பொதுச் செயலாளர் பதவியை இரண்டு நாட்களில் முடிவு செய்து கட்சி தொடங்கும் நாளில் தலைவர் அறிவிப்பார்.

இக்கட்சிக்கு வந்துள்ள அனைவரும் ஏற்கெனவே கொ.மு.க.-வில் இருந்த முக்கிய நிர்வாகிகள். சிறு மாற்றங்கள் செய்து அவர்களை அந்தந்த பொறுப்பிலேயே நீடிக்கும்படி பட்டியல் வெளியிடப்படும்.

முதல் கட்டமாக 11 மாவட்டங் களில் எங்கள் பலத்தை காட்டும் வகையில் மாநாடுகள் நடத்தப்படும். புதிய கட்சியை தொடங்கி வைக்க எங்கள் முன்னாள் கட்சித் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x