

பாலாற்றில் உள்ள தடுப்பணை யின் உயரத்தை அதிகரிக்க ஆந்திர அரசை அனுமதிக்கக் கூடாது என்று கோரி உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
பாலாற்றில் ஏற்கெனவே ஆந்திர அரசு பல இடங்களில் தடுப்பணைகளை கட்டியதால் வெள்ளக் காலங்களில் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. இந்நிலையில், சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம் கிரா மத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தி வருகிறது. இப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இதனால் தண்ணீர் வரத்து முற்றிலும் இருக்காது என்பதால் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் பி.பாலாஜி, தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள 4.20 லட்சம் ஏக்கர் பாசன நிலங்க ளுக்கு பாலாறு உதவி வருகி றது. தமிழக வடக்கு மாவட்ட விவசாயிகள் இந்த ஆற்றையே நம்பியுள்ளனர். வட மாவட்டங் களைச் சேர்ந்த பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் பாலாறு உள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தேவையான நீர் பாலாற்றில் இருந்துதான் பெறப் படுகிறது.
மாநிலங்களுக்கு இடையிலான பாலாறு தொடர்பாக, கடந்த 1892-ல் அப்போதைய மெட்ராஸ் அரசு, மைசூர் சமஸ்தானங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட் டது. ஒப்பந்தத்தின் 2-ம் பிரிவில், ‘மேல் பகுதியில் உள்ள மாநி லங்கள் ஏற்கெனவே பயன்பாட் டில் உள்ள நீர்த்தேக்கங்களின் பரப்பையோ, உயரத்தையோ அதிகரிக்கக் கூடாது. ஆற்றுப் பாசனத்தின் கடைகோடியில் உள்ள மாநிலத்தின் அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதோ, தண்ணீரை திருப்பி விடுவதோ கூடாது. பாலாறு அல்லது அதன் உபநதிகளின் குறுக்கிலோ நதியின் ஓட்டத்தை திருப்பும் வகையிலோ கட்டுமா னம் உள்ளிட்ட வேறு பணிகளை செய்யக் கூடாது’ என்று கூறப்பட் டுள்ளது.
இதை வலியுறுத்தி கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே வழக்கு தாக்கல் செய்தது. இந்நிலையி்ல், தற்போது அந்த ஒப்பந்தத்தை மீறி, சித்தூரில் பெரும்பள்ளம் பகுதியில் பாலாற்றின் குறுக்கில் இருந்த தடுப்பணையின் உயரத்தை 5-ல் இருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்துகிறது. இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகிறது.
ஒப்பந்தப்படி தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச் சையாக ஆந்திர அரசு எடுக்கும் நடவடிக்கை அரசியல் சட்டத் துக்கு எதிரானதாகும். எனவே, அந்த தடுப்பணையின் உயரம் பழைய நிலையிலேயே இருக்க வேண்டும். கூடுதல் நீரை தேக்கக் கூடாது என்றும் தமிழகத்துக்கு வரும் இயல்பான நீரோட்டத்தை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும். தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.