Published : 18 Mar 2017 12:40 PM
Last Updated : 18 Mar 2017 12:40 PM

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பாலாற்றில் தடுப்பணை அறிவிப்பு இல்லை: காஞ்சி மாவட்ட விவசாயிகள் கடும் அதிருப்தி

பாலாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான திட்ட அறிவிப்புகள் ஏதும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாததால், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் பாலாற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் கீழ்வடி நிலக்கோட்ட பாலாறு அதிகாரிகள், பாலாற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு பரிந்துரைத்துள்ளதாக விவசாயிகளிடம் தெரிவித்து வந்தனர்.

இதனால், தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றில் தடுப்பணை அமைப்பது தொடர்பான அறிவிப்பு கள் வரும் என, விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தடுப்பணை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு மற்றும் தடுப்பணை திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால், அரசின் மீது விவசாயிகள் மற்றும் கிராமப்பகுதி பெண்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் கூறியதாவது: பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலத்திலிருந்தே விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. 8 இடங்களில் தடுப் பணை அமைக்கத் திட்டமிட்டுள் ளோம். அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுப் பணித்துறை தெரிவித்தது. இதனால், பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என விவசாயிகள் எதிர்பார்த் திருந்தனர். ஆனால், வழக்கம் போல் அரசு விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. இதனால், அரசின் அதிருப்தி அடைந்துள்ள விவசாயி கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறியதாவது: விவசாயிகளின் வாழ்வாதாரமான பாலாற்று தடுப்பணையை கட்ட அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது. வறட்சியினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கான காலமாகக் கருதி அரசு நடவடிக்கை எடுக்கும் என காத்திருந்தோம்.

ஆனால், விவசாயிகளுக்கு தற்காலிக நிவாரண அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டிருப்பதனால் விவசாயிகள் அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, வாயலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் கூறும்போது, தடுப்பணை இல்லாததால் மழைநீர் கடலில் வீணாகக் கலக்கிறது.

மேலும், நிலத்தடியில் கடல் நீர் ஊடுருவியுள்ளதால் கரையோர விவசாய நிலங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

வாழ்வாதாரமான விவசாயத் துக்கு தண்ணீர் இல்லாததால், தினசரி குடும்ப தேவைக்காக கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அரசு விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற முன் வர வேண்டும். பாலாற்றங் கரையோர கிராமங்களில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x