உயிரைக் காப்பாற்றியவர் மீது பாசத்தை பொழியும் பருந்து: பொள்ளாச்சி அருகே கிராமத்தில் ஓர் அதிசயம்

உயிரைக் காப்பாற்றியவர் மீது  பாசத்தை பொழியும் பருந்து: பொள்ளாச்சி அருகே கிராமத்தில் ஓர் அதிசயம்
Updated on
1 min read

பொள்ளாச்சி கோபாலபுரத்தில் இருந்து கொழிஞ்சாம்பாறை செல்லும் சாலையில் கேரள பகுதியில் அமைந்திருக்கிறது 5-ம் மைல் கிராமம். இங்கு உள்ள சாவடிப் பகுதியில் இருக்கும் கடைகளில், ‘பருந்து வந்து பழகும் அனில்குமார் வீடு’ எது என்று யாரைக் கேட்டாலும் சொல்லிவிடுகிறார்கள்.

சிறிய ஓட்டு வீடு. காலை 7.30 மணியில் இருந்து 8 மணிக்குள் இங்கே வந்து ஆஜராகிவிடுகிறது சுமார் ஆறேழு மாதங்களே வயதுடைய பருந்து.

வீட்டுக்கு வந்தவுடன் அனில்குமார் தோளில் ஏறி அமர்ந்துகொள்கிறது. அவரது மூக்கில் தனது அலகை உரசி சேட்டை செய்கிறது. அவர் வைக்கும் இரையை விரும்பி உண்கிறது. வீட்டில் அவர் இருக்கும் வரை விளையாடுகிறது. அவர் வேலைக்கு புறப்பட்டுச் சென்றதும், தானும் பறந்து காட்டுக்குள் சென்றுவிடுகிறது. இந்தக் காட்சி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே நடந்துகொண்டு இருக்கிறது. இதை சுற்றுவட்டார கிராம மக்களும் பார்த்து வியக்கின்றனர்.

அனில்குமார், கள் இறக்கும் தொழிலாளர். 5 மாதங்களுக்கு முன்பு வண்டித்தாவளம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் கள் பானைகள் கட்டிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, ஒரு பருந்துக் குஞ்சு சிறகு ஒடிந்து, காலில் அடிபட்ட நிலையில், பறக்க முடியாமல் தத்தித்தத்தி செல்ல, ஏராளமான காகங்கள் அதனை துரத்தித் துரத்தி கொத்தியிருக்கின்றன.

பருந்து மீது பரிதாபப்பட்ட அனில்குமார், அதைக் காப்பாற்றி வீட்டுக்கு எடுத்து வந்து காயத்துக்கு மஞ்சள் பொடி வைத்து காப்பாற்றி உள்ளார். 3 மாதங்களில் அந்த காயங்கள் குணமாகி சிறகடித்து பறக்கும்வரை வீட்டிலேயே இரை கொடுத்து வந்துள்ளார். வீட்டுக்குள் இருந்து வளர்ந்த பருந்துக் குஞ்சு, பின்னர், வீட்டுக்கு வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து, பறந்து செல்ல முயன்றுள்ளது.

ஒரு வார காலம் இப்படியே பறந்து பழகிய பின்னர், ஒரு கட்டத்தில் காட்டுக்குள் பறந்து சென்றுவிட்டது. அப்படி பறந்து சென்ற பின்னரும் காலையில் 7.30 மணியில் இருந்து 8 மணிக்குள் தவறாமல் அனில்குமார் வீட்டுக்கு வந்து, அவரிடம் இரை வாங்கி உண்கிறது.

இதுகுறித்து அனில்குமார் கூறியதாவது: காலையில் தவறாமல் பருந்து வந்துவிடும்.

அதற்காகவே மீன், கோழி இறைச்சி, கோழிக் குடல் போன்றவற்றை அதிகாலையில் கடைக்கு சென்று வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிடுவேன். முந்தைய நாள் இரவு வாங்கிக்கொண்டு வந்த இறைச்சி என்றால் தின்னாது. சில சமயம், மாலை நேரத்தில் வரும். நான் பணிக்கு சென்றுவிட்டு வரும்போது எங்காவது மரத்தில் அமர்ந்து காத்துக்கொண்டு இருக்கும். என்னுடைய வண்டி சத்தம் கேட்டதும், கீச், கீச் என சத்தம் எழுப்பிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடும்.

இப்படியே ஒரு மாதத்துக்கு மேலாக நடந்துகொண்டு இருக்கிறது. என் மீது எந்த அளவுக்கு நன்றி, பாசம் வைத்திருக்கிறது என்பதை அது என்னிடம் வந்து உட்காரும்போதெல்லாம் உணர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in