Published : 06 Nov 2016 07:13 PM
Last Updated : 06 Nov 2016 07:13 PM

கூட்டணிக்காக தேடி வந்து விட்டு தற்போது விமர்சிப்பதா?- வைகோவுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

கூட்டணி வேண்டும் என்று தேடி வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தற்போது தேமுதிக தலைவரை விமர்சிக்கிறார் என்று அக்கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னை விமான நிலைய வந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''வைகோ உணர்ச்சிவசப்படக் கூடிய நபர். அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி செயல்படுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தைச் சொல்வார். எனவே, அவர் சொல்கிற கருத்துக்களுக்கு நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கூட்டணி வேண்டும் என்று தேடி வந்ததும் வைகோ தான், தற்போது எங்களை விமர்சிப்பதும் அவர் தான். எனவே, அவரது கருத்து குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்'' என்று பிரேமலதா கூறினார்.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, அடங்கிய ம.ந.கூட்டணி, தமாகா, தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இந்தக் கூட்டணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்டார். எனினும், இந்தக் கூட்டணி சார்பில் போட்டிய முன்னணி தலைவர்கள் உட்பட அனைவரும் தோல்வியை தழுவினர்.

இந்நிலையில், வார இதழ் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ''தேமுதிக தலைவர் விஜயகாந்தை சட்டப்பேரவைத் தேர்தலின் போது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்ததால் தனது இமேஜ் பாதிக்கப்பட்டது என்றும், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்ததும் தவறு'' என்றும் கூறியிருந்தார். வைகோவின் இந்தக்கருத்து தேமுதிகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, வைகோவின் கருத்து குறித்து பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரேமலதா பதிலளிக்கையில், ''கூட்டணி வேண்டும் என்று தேடி வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தற்போது தேமுதிக தலைவரை விமர்சிக்கிறார்'' என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x