

# ஈரோடு தொகுதியில் மஞ்சள், கரும்பு, நெல் ஆகியவை முக்கிய விளைபொருட்கள். ஆனால், விலை வீழ்ச்சியால், மஞ்சளைக் கிடங்கில் வைத்து விட்டு, எப்போது நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஈரோட்டில் மஞ்சள் ஏற்றுமதிச் சந்தையை உருவாக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை. ஆனால், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.
# வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதால், உள்ளூர் சர்க்கரைச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டிருப்பது கரும்பு விவசாயிகள்தான். நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல், ஆண்டுக் கணக்கில் இழுத்தடித்துவருகின்றன. தவிர, கரும்புக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்கிற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை எந்த அரசும் நிறைவேற்றவில்லை. அதேபோல், நெல்லுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்பதும் விவசாய அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கை.
# சாயக் கழிவுநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். அதற்காக ‘தமிழ்நாடு தொழிற்சாலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியம்’ என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். சாயக் கழிவுகளுடன், மாநகராட்சி மற்றும் வேளாண் கழிவுகளையும் சேர்த்துச் சுத்திகரிக்க வேண்டும். சுத்திகரிப்புக்கான செலவைத் தொழில் முனைவோர்களிடம் இருந்து பெறலாம். பொதுச் சுத்திகரிப்பு நிலையங்களைத் தொகுப்பு முறையில் ஆய்வு செய்து, பல பகுதிகளில் நிறுவ வேண்டும் என்கின்றனர் மக்கள்.
# தமிழக அரசும், மத்திய அரசும் பூஜ்யமுறை சுத்திகரிப்பின் சாதக பாதகங்களை நீதிமன்றத்தில் எடுத்துச்சொல்லி, மறு ஆய்வு மனு சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் தொகுதியின் பிரதான தொழிலாக உள்ள ஜவுளி மற்றும் தோல் பதனிடும் தொழிலைக் காக்க முடியும். மாறாக, தொழில்களை ஒட்டுமொத்தமாக முடக்குவதால் லட்சக் கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளாகக் கனவுத் திட்டமாக இருக்கும், சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கடலில் கலக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது மக்களின் பெரு விருப்பம்.
# தொகுதியின் பிரதானத் தொழிலான ஜவுளித் தொழில் நூல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி ஏற்றுமதிக்கான வாய்ப்பை அதிகரிக்கவில்லை. ஈரோடு ஜவுளிச் சந்தையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. சுமார் மூன்று லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசைத்தறியில் உற்பத்தியாகும் துணிகளுக்கான ஏற்றுமதிச் சந்தையை உருவாக்கவில்லை. ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்குத் திரும்ப வழங்கப்படும் ஏற்றுமதி மீதான வரி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.பி. வாக்குறுதி அளித்திருந்தார். அதையும் செய்யவில்லை. காங்கயம், தாராபுரம் பகுதிகளில் எண்ணெய், அரிசி ஆலைத் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்கின்றனர் மக்கள்.
# தொகுதியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் உள்ளன. மாநகராட்சிப் பகுதியில் நான்கு லட்சம் பேர் வசிக்கும் நிலையில், போக்குவரத்தைச் சீர்ப்படுத்த சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
# ஈரோடு, காங்கயம், தாராபுரம் பகுதி மக்களின் பல ஆண்டுக் கனவான ஈரோடு - பழனி ரயில் திட்டம், நிதி ஒதுக்கீடு இல்லாததால் முடக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் காங்கயம், தாராபுரத்துக்கு ரயில் சேவை கிடைக்கும். அந்தப் பகுதிகள் தொழில் வளர்ச்சி அடையும். ஆனால், திட்டம் முடங்கிக்கிடப்பதால், அந்தப் பகுதி மக்களும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் இடையே மின்சார ரயில் சேவை மற்றும் ஈரோடு - திருப்பதி புதிய ரயில் திட்டம் தொடங்கப்படும் என்று எம்.பி. சொல்லியிருந்தார். நிறைவேற்றப்படவில்லை. ஈரோடு ரயில் நிலையத்தில் லிஃப்ட் வசதிகூட இல்லை. கூடுதலாக ஒரு பிளாட்ஃபாரம் கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதும் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
# காவிரி ஓடும் நகராக இருந்தாலும், கோடைக் காலங்களில் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியவில்லை. ஈரோடு நகருக்கென்று புதிய குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள்.
# மொடக்குறிச்சியில் சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம், ஈரோட்டில் மஞ்சள் வணிக வளாகம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்படும் என்று எம்.பி. வாக்குறுதி கொடுத்திருந்தார். மேற்கண்டவற்றில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை.