Published : 22 Mar 2017 12:27 PM
Last Updated : 22 Mar 2017 12:27 PM

உயர் கல்விக்காக வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: முதல்வர்

உயர் கல்விக்காக வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

டெல்லி ஜே.என்.யூ.,வில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக விளக்கமளித்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதனைத் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "டெல்லி ஜே.என்.யூ., வில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் கடந்த 12-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.

இந்தச் செய்தியை அறிந்ததுமே முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்தேன். மேலும், அவரது உடலை தமிழகத்துக்கு கொண்டுவர வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

அதன்படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் முத்துக்கிருஷ்ணனின் உடல் தமிழகம் கொண்டுவரப்பட்டது.

தமிழக அரசு சார்பில் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், உயர்கல்விக்காக வெளிமாநிலங்கள் செல்லும் தமிழக மாணவர்களை அரசு பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியிருக்கிறார்.

வெளிமாநிலங்களில் உயர் கல்வி கற்கச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x