

ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க நிபந்தனை அடிப்படையில் பணிபுரியும் அரசு, அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்புச் செயலாளர் கே. நாகசுப்பிரமணியன் கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 23.08.2010-க்குப் பின்னர், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் முறையான ஒப்புதலுடன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கான நிபந்தனைக் காலம் 23.11.16-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் வேலை பறிபோய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் பணிக்கான தகுதிகாண் பருவமான 2 ஆண்டுகளையும் கடந்து பணியாற்றி வரும் நிபந்தனை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் அரசு ஓர் தவிர்ப்பாணை வெளியிட வேண்டும். தகுதித்தேர்வு எழுதும் நிபந்தனையில் பணியாற்றிவரும் எங்களுக்கு தற்போதைய சூழலில் தேர்வு எழுதும் மனநிலை இல்லை. பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாளில் பிரதான பாடத்திலிருந்து (Major subject) 10 மதிப்பெண்களுக்கான வினாக்களும், 140 மதிப்பெண்களுக்கு பிரதான பாடப்பிரிவுக்கு அப்பாற்பட்டு வினாக்களும் இருப்பதால் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது கடினம். மேலும் அரசு உதவிபெறும் சிறுபான்மையின பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது என்ற கருத்து நிலவுகிறது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்ட விதிமுறைகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு மட்டுமே தகுதித்தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே அரசு இதனை கொள்கை அறிவிப்பாக வெளியிட வேண்டும். மேலும் 2012 மற்றும் 2013 ஆகிய 2 முறை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் 2013-ம் ஆண்டு மட்டும் 5 மதிப்பெண் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால் 2012-ம் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தகுதித்தேர்வை மட்டும் காரணம் காட்டி, கடந்த 6 ஆண்டுகளாக எங்களுக்கு வளரூதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட சலுகைகள் கூட கிடைக்கவில்லை. நியமன ஒப்புதல்கள் ஏற்கப்படாததால் பல ஆசிரியர், ஆசிரியைகள் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி 8-ம் தேதி இதுகுறித்த கோரிக்கைகளை முதல்வருக்கு கடி தமாக எழுதியுள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நடைபெற உள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எங்க ளுக்குச் சாதகமான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.