Published : 21 Nov 2014 08:27 AM
Last Updated : 21 Nov 2014 08:27 AM

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 5 மீனவர்களும் தமிழகம் திரும்பினர்: பிரதமர் மோடியுடன் சந்திப்பு இல்லை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் கொழும்பில் இருந்து நேற்று டெல்லி சென்றனர். அங்கிருந்து நேற்று நள்ளிரவு விமானம் மூலம் அவர்கள் சென்னை திரும்பினர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கு

ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோர் போதைப் பொருள் கடத்தியதாக கடந்த 2011-ம் ஆண்டு இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு 2012-ம் ஆண்டு இறுதிவரை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் வழக்கு விசாரணை கொழும்பு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 30-ம் தேதி 5 பேருக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

அவர்களை விடுவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் மீனவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு சட்டரீதியாகவும் ராஜ்ஜியரீதியாகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.

மீனவர்களின் மரண தண்ட னைக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது 5 மீனவர்களின் மரண தண்டனையை ரத்து செய்யவும் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கவும் ராஜபக்ச ஒப்புக் கொண்டார்.

எனினும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றால்தான் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என்று இலங்கை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மேல்முறையீட்டு மனு உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.

இதைத் தொடர்ந்து 5 மீனவர்களுக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அதிபர் ராஜபக்ச தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தார். அதிபரின் அறிவிப்பைத் தொடர்ந்து வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 மீனவர்களும் நேற்றுமுன்தினம் மாலை விடுதலை செய்யப்பட்டனர். அன்று இரவு அவர்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

பிரதமரை சந்திக்கவில்லை

பின்னர் நேற்று காலை அவர்கள் கொழும்பில் இருந்து நேரடியாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். தமிழகம் வராமல் மீனவர்கள் டெல்லிக்கு சென்றதால் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுவார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் பிரதமரை சந்திக்கும் திட்டம் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அக்பருதீன் தெளிவு படுத்தினார். அவர் கூறிய போது, சில சம்பிரதாய நடவடிக்கை களுக்காகவே மீனவர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவித்தார்.

மீனவர்கள் பேட்டி

ஐந்து மீனவர்களும் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

மரண தண்டனை விதிக்கப்பட்ட வுடன் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தோம். ஆனால் இந்திய தூதரக அதிகாரிகள் எங்களைச் சந்தித்து விடுதலை அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளித்தனர். அவர்களின் ஆறுதல் எங்களுக்கு தைரியம் அளித்தது.

இதைத் தொடர்ந்து இருநாடு களின் ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் மரண தண்டனையில் இருந்து விடுதலை பெற்றோம். சாவின் விளிம்பில் இருந்து எங்களை மீட்க உதவிய மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது விடுதலைக்காகப் போராடிய தமிழக மக்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்கள் 5 பேரும் நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை புறப்பட்டனர். அவர்கள் நள்ளிரவில் சென்னை வந்தடைந்தனர். அங்கிருந்து ராமேஸ்வரம் தங்கச்சி மடத்துக்கு செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x