

கொங்கு மக்களின் வாக்கு எந்தக் கூட்டணிக்குப் போகும் என்று கணிக்க முடியாத நிலையில் கொங்கு மக்களுக்காக கட்சி நடத்துவதாகச் சொல்லும் மூன்று கட்சிகளுமே நாங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறோம் என பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரே கட்சியாக இருந்த கொங்குநாடு மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்து நின்று சுமார் 5 லட்சத்து 82 ஆயிரம் ஓட்டுகளை பெற்றது.
இப்போது கொமுக மூன்றாக உடைந்துவிட்டாலும் மூன்றுமே பாஜக கூட்டணிக்கு முஸ்தீபு காட்டுவதுதான் கொங்கு மண்டலத்து வாக்காளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கொமுக-விலிருந்து விலகிய அதன் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை (கொமதேக) தொடங்கி இரண்டு மாதங்களுக்கு முன்பு பெருந்துறையில் மாநாடு நடத்தினார். அதே தினத்தில் கொமுக தலைவர் பெஸ்ட் ராமசாமி கோவையில் கூட்டம் போட்டு தாங்கள் பாஜக கூட்டணியில் இருப்பதாக அறிவித்த தோடு, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பெயரையும் அறிவித்தார்.
பெஸ்ட் ராமசாமியின் இந்த நடவடிக்கையில் அதிருப்தி யடைந்து, கொமுக-வின் பொதுச் செயலாளராக இருந்த ஜி.கே.நாகராஜ், வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு 51 பேர் கொண்ட குழுவை அமைத்து பெஸ்ட் ராமசாமி அறிவித்த வேட்பாளர் பட்டியல் செல்லாது என அறிவித்ததுடன் கொங்குநாடு ஜனநாயகக் கட்சி என்ற புதுக் கட்சிக்கு கடந்த வாரம் பூஜை போட்டார்.
“நாங்கள் தமிழகத்தில் பாமக தலைமையிலான சமூக ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். எங்கள் கூட்டணி தேசிய அளவில் பாஜக கூட்டணியுடன் தேர்தல் உடன்படிக்கை கொள்ளும்’’ என்று நாகராஜ் அறிவித்தார்.
இந்நிலையில் கொமதேக தலைவர் ஈஸ்வரனும், அக்கட்சி நிர்வாகிகளும் வியாழனன்று பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துவிட்டு வந்து, 'மோடியை பிரதமராக்குவதற்காக பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேசி முடிவு செய்வோம்’ என்று அறிவித்தார். இதுகுறித்து கொஜக தலைவர் நாகராஜிடம் கேட்டபோது, 'ஈஸ்வரன் அணியினர் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்கிறார்கள்.
நாங்கள் தமிழக அளவில் சமூக ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். சமூக ஜனநாயகக் கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும்’’ என்றார். இதுஒருபுறமிருக்க முதல் ஆளாக பாஜக-வுடன் கூட்டணி என அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்த கொமுக தலைவர் பெஸ்ட் ராமசாமி அமைதியாகவே இருக்கிறார்.