

தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் இனவிருத்தியைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு கடல் பகுதியாக ஆண்டுதோறும் 45 நாட்கள் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
இந்த ஆண்டு, கிழக்கு கடல் பகுதியில் இன்று (ஏப்-15) முதல் மே மாதம் 29-ம் தேதி முடிய 45 நாட்களுக்கு கடலில் மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது.
தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை 13 கடலோர மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் மொத்தம் 15,000 விசைப்படகுகள் கடலுக்குள் செலுத்தாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
அரசு நிவாரணத் தொகை:
45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தில் அரசு மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிவருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ரூ.2500 நிவாரணத் தொகை வழங்கிவரும் நிலையில் இந்த ஆண்டு முதல் ரூ.5000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்கள் புதிய வலைகள் பிண்ணுவது அல்லது வலைகளை சீரமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.
மீன்பிடி தடைக்காலத்தில் வேறு பணிகளுக்குச் செல்ல முடியாத மீனவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி குடும்பம் நடத்தும் சூழல் இருப்பதால் நிவாரணத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது.