

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் முடிவை ஓரிரு நாட்களில் அறிவிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகரில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள கட்சிகள் அனைத்தும் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கேட்ட போது, ‘‘ஸ்டாலினின் அழைப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்’’ என தெரிவித்தார்.
அதே நேரத்தில், ‘ஆர்.கே.நகரில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம். மக்கள் நலக் கூட்டணி போட்டியிடுவது உறுதி’ என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்தார். இதனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோ சனைக் கூட்டம், நேற்று மாலை நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செய லாளர் மு.வீரபாண்டியன், நிர்வாகக் குழு உறுப்பினர் பெரியசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் து.ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர் தல் குறித்தும், திமுகவின் அழைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ‘‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதித்தோம். மக்கள் நலக் கூட்டணியின் முடிவை ஓரிரு நாளில் அறிவிப்போம்’’ என்றார்.