பொறியியல் படிப்புக்கு ஆன்-லைனில் பதிவுசெய்ய முடியாமல் மாணவர்கள் ஏமாற்றம்: அண்ணா பல்கலை. இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு - மாலை 6 மணிக்குப் பின்னரே பதிவு தொடங்கியது

பொறியியல் படிப்புக்கு ஆன்-லைனில் பதிவுசெய்ய முடியாமல் மாணவர்கள் ஏமாற்றம்: அண்ணா பல்கலை. இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு - மாலை 6 மணிக்குப் பின்னரே பதிவு தொடங்கியது
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் பதிவுசெய்ய முடியாமல் முதல் நாளில் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு மாலை 6 மணிக்குப் பின்னரே ஆன்லைன் பதிவு தொடங்கியது.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக் கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல் 15) முதல் ஆன்-லைனில் பதிவுசெய்யலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதற்காக 14-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நாளிதழ்களில் ஆன்-லைன் விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்காக பிரத்யேக இணையதள இணைப்பு (>www.annauniv.edu/tnea2016) கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை பார்த்த மாணவ- மாணவிகள் நேற்று காலை ஆன்லைனில் பதிவு செய்ய முயன்றனர். ஆனால், இணையதள இணைப்பு கிடைக்கவில்லை.முதல் நாள் என்பதால் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிக்க முயற்சி செய்வார்கள். எனவே இணைப்பு கிடைக்காமல் போகியிருக்கலாம் என்று மாணவர்கள் பொறுமை காத்தனர்.

காலை 11 மணிக்கு மேல் ஆகியும் ஆன்லைனில் பதிவுசெய்ய இயலாததால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தமிழகம் முழுவதும் இருந்தும் அண்ணா பல்கலைக்கழகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரம் கேட்டனர். சர்வரில் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் பகல் 1 மணி முதல் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஆன்லைனில் பதிவுசெய்யலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, இந்த ஆண்டு ஆன்- லைனில் மட்டுமே பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற தகவல் தெரியாத ஒருசில மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேற்று விண்ணப்பம் வாங்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பகல் 1 மணி முதல் ஆன்லைனில் பதிவுசெய்யலாம் என்ற தகவல் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஓடியபடி (ஸ்க்ரோல்) இருந்தது. இதைப் பார்த்ததும் மாணவர்கள் 1 மணி வரை பொறுமை காத்தனர். ஆனால், 1 மணிக் குப் பின்னரும் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படாததால் மாண வர்களால் ஆன்லைனில் பதிவு செய்ய முடியவில்லை. மாலை 6 மணிக்கு மேலாகியும் இதே நிலைதான் நீடித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in