Published : 31 Dec 2013 03:15 PM
Last Updated : 31 Dec 2013 03:15 PM

நம்மாழ்வாரின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது: ஜெயலலிதா புகழஞ்சலி

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

நம்மாழ்வாரின் மறைவையொட்டி அவர் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக 30.12.2013 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

வேளாண் துறையில் பணிபுரிந்து வந்த நம்மாழ்வார், ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப் பணியையே துறந்தவர். இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுருமாரன்பட்டி என்ற இடத்தில் 35 ஏக்கர் நிலத்தை வாங்கி, "வானகம்" என்ற அமைப்பை அங்கு ஏற்படுத்தி, தனது கடுமையான உழைப்பின் காரணமாக "இங்கு விளையாத பயிரும் உண்டோ" என்று மற்றவர் கேட்கும் அளவுக்கு அந்த இடத்தில் பசுமையான சூழ்நிலையை உருவாக்கிய பெருமை இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரையே சாரும்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் நம்மாழ்வார். எந்தச் சூழலிலும் அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் நம்மாழ்வார். இயற்கையை காக்க இடிமுரசு போல் முழங்கிக் கொண்டிருந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இயற்கை எய்தியது ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.

இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. நம்மாழ்வாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x