கரூர் அருகேயுள்ள நரிக்கட்டியூரில் 100-ஐ கடந்த மாணவர் சேர்க்கை: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாதனை

கரூர் அருகேயுள்ள நரிக்கட்டியூரில் 100-ஐ கடந்த மாணவர் சேர்க்கை: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாதனை
Updated on
1 min read

தனியார் பள்ளி மோகத்தால் அரசுப் பள்ளிகளில் போதுமான மாணவர் சேர்க்கையின்றி பள்ளிகள் மூடும் நிலையில், நடப்பாண்டு 100 மாணவர்களுக்கு மேல் சேர்த்து சாதனை படைத்துள்ளது கரூர் மாவட்டம் நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி.

1956-ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 2002-ல் மாணவர் எண்ணிக்கை வெறும் 5-ஆக குறைந்ததால், பள்ளி மூடப்படும் நிலைக்குச் சென்றது. இந்நிலையில், அங்கு 2002-ல் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்ற விஜயலலிதாவின் முயற்சியால், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்தது.

மேலும், அவரது சொந்த செலவில், பள்ளிக்கு கூடுதல் கட்டிடம், மின்விசிறி, கழிப்பிட வசதிகளை செய்துகொடுத்தார். இதையடுத்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளில், நன்கொடை மூலம் டைல்ஸ், மின்விசிறி, பாடங்கள் தொடர்பான படங்கள், சுத்தரிகரிக்கப்பட்ட குடிநீர், கணினி, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

தூய்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு காரணமாக ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஆங்கில வழிக் கல்வியும் தொடங்கப்பட்டது.

நடப்பாண்டு 1-ம் வகுப்பில் 28 மாணவர்கள், 31 மாணவிகள் என மொத்தம் 59 பேர் சேர்ந்துள்ளனர். இதேபோல, 2 முதல் 5-ம் வகுப்பு வரை 50 பேர் என மொத்தம் 109 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். பள்ளி தொடங்கியதிலிருந்து ஒரே ஆண்டில் 109 மாணவ, மாணவிகள் சேர்ந்தது இதுவே முதல்முறையாகும். ஏற்கெனவே தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், தற்போது இப்பள்ளியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளியில் புதிதாகச் சேர்ந்த 109 மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு, கடந்த 16-ம் தேதி பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிலையில், இப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா நேற்று நடைபெற்றது. இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எம்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலலிதா கூறும்போது, “மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவது, ஒழுக்கம், பள்ளி வளாகத்தை தூய்மையாகப் பராமரிப்பது உள்ளிட்டவற்றால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆட்டோ மூலம் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர். தனியார் மழலையர் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளையும், இப்பள்ளியில் பல பெற்றோர் சேர்த்துள்ளனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in