

மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை வகுப்புவாத சக்திகளின் கருத்துகளை திணிப்பதாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியது:
தாழ்த்தப்பட்டோருக்கான துணைக்கூறு திட்ட (SCP) நிதியை அவர்களுக்கே முழுமையாக செலவிட வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளேன். துணைக்கூறு திட்ட நிதியை செலவிடுவது தொடர்பாக ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் தனிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம், புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டோருக்கான நிதி பல்வேறு துறைகளுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது.
வகுப்புவாத அமைப்புகளின் கருத்துகள் இடம்பெறச் செய்யும் வகையிலும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் தேசிய கல்விக் கொள்கை உள்ளது. மத்திய அரசு சங்பரிவார் அமைப்புகளின் வழிகாட்டுதல்படி இக்கொள்கையை வகுக்கக் கூடாது. கல்வியை முழுவதும் வர்த்தகமயமாக்கும் நோக்கில் கல்விக் கொள்கை உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கல்வி நிலையங்களை திறந்து பெருத்த லாபம் சம்பாதிக்கவும், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மீது விளக்கம் கோராமல் நடவடிக்கை எடுக்கவும் இந்த புதிய கல்விக் கொள்கை வழிவகை செய்கிறது. எனவே தேசிய கல்விக் கொள்கையின் தற்போதைய வடிவம் கண்டனத்துக்குரியது என்றார்.