

சென்னை தண்டையார்பேட்டை யில் ரூ.2 கோடியில் ‘அம்மா சுற்றுச்சூழல் பூங்கா’ அமைக்கப் படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை யில் விதி 110-ன் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
குழந்தைகள், பள்ளி மாணவர் கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தண்டை யார்பேட்டையில் 50,110 சதுரஅடி நிலத்தை மேம்படுத்தி புல்வெளி நடைபாதை, சிறுவர் பூங்கா, விளையாட்டுத் திடல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகள் போன்ற வசதிகளுடன் ‘அம்மா சுற்றுச்சூழல் பூங்கா’ ஒன்று ரூ.2 கோடியில் அமைக்கப்படும்.
ஆவடி நகராட்சி எல்லையில் 87.06 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பருத்திப்பட்டு ஏரியின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மேம்படுத்தப்படும். தூர் வாருதல், நீர்வரத்து வாய்க்காலை மேம்படுத்துதல், நீரியல் தரத்தை சீராக்குதல் போன்ற பணிகள் ரூ.28.16 கோடியில் மேற்கொள்ளப்படும். பறவைகள் வந்து செல்வதற்கு ஏற்ற இயற்கை சூழலுடன்கூடிய தீவுகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.