Published : 23 Mar 2016 01:01 PM
Last Updated : 23 Mar 2016 01:01 PM

நீங்கள் கிங் என்றார்கள்; உடனே ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டேன்: விஜயகாந்த்

மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தொகுதி உடன்பாடு கையெழுத்தான பின்னர் கூட்டணி தலைவர்களுடன் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த விஜயகாந்த், "நீங்கள் கிங்காக இருங்கள்; நாங்கள் கிங் மேக்கராக இருக்கிறோம்" என்றார்கள். உடனே கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டேன்" என்றார்.

விஜயகாந்த் பேச்சின் முழு வடிவம்:

எப்போதும் எங்கள் கட்சி கூட்டத்திலேயே நான் பேசியதால், மேடைகளில் இதுவரை யாருடைய பெயரையும் சொன்னதில்லை. இப்போது முதன்முறையாக கூட்டணி முடிவாகிவிட்டதால் எல்லோரின் பெயரையும் சொல்கிறேன். மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்களுக்கும், பீமனாக இருக்கும் திருமாவளவன் அவர்களுக்கும், தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரன்பு கொண்ட சகோதர சகோதரிகளே, என் உயிரினும் மேலான அன்பு சகோதரர்களே எல்லாருக்கும் வணக்கம்.

மக்கள் நலக்கூட்டணியுடன் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால், என்னை மாற்றிக்கொள்ள முழுமையாக முயற்சி செய்கிறேன். யாருடைய பெயராவது விட்டுப் போயிருந்தால் தயவு செய்து வருத்தப்படாதீர்கள். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் நலக்கூட்டணியினர் நால்வரும் வந்து, "நீங்கள் கிங்காக இருங்கள்; நாங்கள் கிங் மேக்கராக இருக்கிறோம்" என்றார்கள். உடனே கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டேன்.

அண்ணன் வைகோ, "கூட்டணி ஆட்சி என்று கூறலாமா?" என்று கேட்டார். ''தாராளமாக அறிவித்துவிடுங்கள்'' என்று கூறினேன்.

பணத்தாசை கொண்டவன் என்றார்கள்; பேரத்துக்கு பணிந்துவிட்டேன் என்றார்கள். பத்திரிகை நண்பர்களே உங்களைத்தான் சொல்கிறேன்.

அந்தப் பக்கம் போய்விட்டேன் என்றீர்கள். இந்தப்பக்கம் சாய்ந்துவிட்டேன் என்றீர்கள். ஆனால் நான் அன்று அறிவித்தபடி, மக்களுடன் தான் கூட்டணி வைத்திருக்கிறேன். தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி என்று கூறியதுபோல இன்று மக்கள்நலக் கூட்டணியுடன் தான் கூட்டணி.

தெய்வம்தான் அவர்களோடு என்னை கூட்டு சேர வைத்திருக்கிறது. அவர்களுக்கு தெய்வத்தை பிடிக்குமா என்று தெரியாது, ஆனால் எனக்குப் பிடிக்கும்.

நான்கு பேரும், நான்கு விதமான கொள்கையுடையவர்கள் என்று நினைக்காதீர்கள். நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்து உடையவர்கள். அவர்கள், நீங்கள் கிங்காக இருங்கள்; நாங்கள் கிங் மேக்கராக இருக்கிறோம் என்று கூறிவிட்டார்கள். இங்கிருக்கும் அனைவருமே என்னை விட மூத்தவர்கள். இதிலிருந்தே தெரியவேண்டாமா? இருந்தும் அவர்கள் ஏன் என்னை ஏற்றுக் கொண்டார்கள்? அவர்களுக்கு என் கட்சி சார்பாகவும், தொண்டர்கள் சார்பாகவும் நன்றி.

அதிக நேரம் நான் பேச விரும்பவில்லை. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. இத்துடன் என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம் மக்களே! அதே போல சுதீஷ் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சினிமாவில் நடித்திருப்பதால், அங்கு வசனங்களை எனக்குப் பின்னால் ஒருவர் கூறிக்கொண்டே இருப்பார். அதை நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். அதனால் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

அதனாலேயே நான் ஒரு பக்கம் பார்த்துப் பேச மாட்டேன். பல பக்கம் பார்த்துப் பேசுவேன். எழுதி வைத்துப் பேசுவது எனக்குப் பிடிக்காது. பேப்பரைக் கீழே பார்த்து படிக்க வேண்டிய நேரத்தில், எல்லோரும் கத்துவார்கள். கத்தினால் எனக்குப் பிடிக்காது. அது என் இயற்கையான குணம். அவர்களுக்கு கேப்டன் பேச்சை நிறுத்திவிட்டாரே என்ற கோபம்.

அதற்குத்தான் என் மனைவி பிரேமலதா சொன்னார்கள். ''இதுக்கே இப்படி கோபப்படுகிறார்களே, ஒருவர் ஐந்து வருடங்களாக பேசாமல் இருந்தார் என்று ஒருவர் கிண்டல் செய்தாரே, அவரே அந்தக் கட்சிக்குப் போயிருக்கிறாரே, அவரை என்னவென்று சொல்வது" என்று கேட்டார்கள். அன்றைக்கு முதல்வரைக் கிண்டல் அடித்தவர்தான் இன்றைக்கு கட்சிக்கு போயிருக்கிறார். அதே கட்சிக்குத்தான் போயிருக்கிறார்.

இன்னொரு விஷயம், என் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அண்ணன் வைகோ இருப்பார். இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன். வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x