

தனியார் துறை நலனுக்காக குளச்சல் திட்டத்தை கேரள அரசு எதிர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''குளச்சல் ஆழ்கடல் துறைமுகத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு பிரதமரைச் சந்தித்து மனு அளித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
குளச்சல் ஆழ்கடல் துறைமுகத் திட்டம் 60 ஆண்டுகள் பழமையானது. கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்ற காரணத்தினால் இலங்கை அரசின் வற்புறுத்தலுக்கு இணங்க இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அதைப் பயன்படுத்தி கேரள அரசு குளச்சலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் விழிஞ்ஞம் என்னும் இடத்தில் துறைமுகம் அமைக்க திட்டமிட்டு அவசரஅவசரமாக அதானி குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது. இது 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இத்துறைமுகத்தை 20 ஆண்டுகளுக்கு அதானி குழுமம் பராமரிக்கும். அதாவது இதன் மூலம் கிடைக்கும் வரும்படி தனியாருக்குச் செல்லும்.
ஆனால், குளச்சல் துறைமுகத் திட்டம் ரூ. 27 ஆயிரம் கோடி செலவில் அரசுத் துறையால் அமைக்கப்படுகிறது. விழிஞ்ஞம் திட்டத்தைவிட இது மிகப்பெரியத் திட்டம். இதன் மூலம் சர்வதேச கப்பல் போக்குவரத்து அதிகரிக்கும். இந்துமாக்கடல் பகுதியில் மிக முக்கியமான துறைமுகமாக குளச்சல் விளங்கும். இதன் மூலம் தென் மாவட்டங்களில் தொழில் பெருகி பொருளாதாரம் வளரும்.
தனியார் துறை நலனுக்காக தமிழக மக்களின் பொருளாதார வளர்ச்சித் திட்டத்தை கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு எதிர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.